நான் முதல்வன் திட்டத்தில் பல பொறியியல் கல்லூரிகள் இன்னும் பதிவு செய்யவில்லை

‘நான் முதல்வன்’ திட்டத்தில் பல பொறியியல் கல்லூரிகள் தங்களை பதிவு செய்யவில்லை என தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இயக்குநர் இன்னசன்ட் திவ்யா கூறினார்.

Update: 2022-09-13 17:57 GMT

'நான் முதல்வன்' திட்டத்தில் பல பொறியியல் கல்லூரிகள் தங்களை பதிவு செய்யவில்லை என தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இயக்குநர் இன்னசன்ட் திவ்யா கூறினார்.

கல்லூரி முதல்வர்களுக்கு கருத்தரங்கம்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர்கள் மற்றும் 'நான் முதல்வன்' திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு பேராசிரியர்களுக்கான கருத்தரங்கம் காட்பாடி வி.ஐ.டி.யில் நடந்தது. கருத்தரங்கிற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். தொழில்நுட்ப கல்வி இயக்குனரக ஆணையர் லட்சுமிபிரியா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இயக்குநர் இன்னசன்ட் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இயக்குனர் இன்னசன்ட் திவ்யா பேசியதாவது;-

'நான் முதல்வன்' திட்டத்தில் அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும். மிக முக்கியமான பாடங்களை தேர்வு செய்து உள்ளோம். இன்றைய போட்டி உலகில் மாணவர்களுக்கு, கல்வி மட்டுமின்றி அவர்களின் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சிகள் 'நான் முதல்வன்' திட்டத்தில் வழங்கப்படுகிறது.

உயர் கல்வித்துறையில் சிறந்து விளங்கும்

தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்ற பொறியியல் மாணவர்கள் மட்டுமின்றி கலை, அறிவியல் மாணவர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் தமிழ்நாடு உயர்கல்வித்துறையில் சிறந்து விளங்கும்.

மேலும் யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி, வங்கி உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது, தமிழக அரசு, இன்றைய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக மாணவர்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தனித்திறன் பயிற்சி அனைவருக்கும் ஏற்படுத்த கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்கள் முன்வர வேண்டும்.

கல்லூரிகள் பதிவு செய்யவில்லை

தகவல் தொடர்பு பரிமாற்றங்களுக்காக மாணவர்களுக்கு பல்வேறு மொழிகள் தொடர்பான பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு கல்வி நிலையங்கள் முன்வர வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பொறியியல் படித்து முடித்தவர்களுக்கும் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு கல்லூரி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியில் படித்த மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இருப்பினும் பெரும்பாலான கல்லூரிகள் இன்னும் 'நான் முதல்வன்' திட்டத்தில் தங்களை பதிவு செய்யவில்லை. அவர்களும் பதிவு செய்ய முன் வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம், வி.ஐ.டி. இணை துணை வேந்தர் நாராயணன், உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்