மண்ணுளி பாம்பை ரூ.10 லட்சத்திற்கு விற்க முயற்சி; 6 பேர் கைது

களக்காடு பகுதியில் மண்ணுளி பாம்பை ரூ.10 லட்சத்திற்கு பேரம் பேசி விற்க முயன்ற சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-26 20:14 GMT

களக்காடு:

களக்காடு பகுதியில் மண்ணுளி பாம்பை ரூ.10 லட்சத்திற்கு பேரம் பேசி விற்க முயன்ற சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மண்ணுளி பாம்பு

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் சிலர் மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் வனசரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது களக்காடு-சேரன்மாதேவி சாலையில் ஒரு காரில் 2 பேர் சந்தேகத்திடமான முறையில் பேசி கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிசந்தை அருகே உள்ள கல்குளத்தை சேர்ந்த தனசேகர் மகன் தனீஸ் (வயது 27), கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஜார்ஜ் மகன் சன்னி (59) என்பது தெரியவந்தது.

6 பேர் கைது

மேலும் தனீஸ் தன்னிடம் மண்ணுளி பாம்பு விற்பனைக்கு இருப்பதாக சன்னி, எர்ணாகுளம் ஹைகாட்டுகாராவை சேர்ந்த அர்சத் (55) என்பவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து அவர்கள் பாம்பை வாங்குவதற்காக களக்காடு வந்துள்ளனர். ரூ.10 லட்சம் வரை பாம்புக்கு பேரம் பேசியதும் தெரியவந்தது.

இதையடுத்து கீழக்கருவேலங்குளம் கரையிருப்பை சேர்ந்த முத்துசாமி (43) என்பவரது தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய கார், லேப்-டாப், செல்போன்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தனீஸ், சன்னி, அர்சத், முத்துசாமி, தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி தொண்டர் தெருவை சேர்ந்த முருகேசன் (45), கீழப்பத்தை பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த ஹரி என்ற அய்யப்பன் (41) ஆகிய 6 பேரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்