300 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு

300 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

Update: 2022-07-09 17:20 GMT

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே 300 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை அனுமதியின்றி நடத்தியதாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மஞ்சுவிரட்டு

எஸ்.புதூர் அருகே குமரமுடைய அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு உலகம்பட்டி, புதுவாடி, ஆரணிபட்டி, படமிஞ்சி, கண்டியாநத்தம் முத்திரி காடன் ஆகிய 5 கிராமங்கள் இணைந்து மஞ்சுவிரட்டு போட்டி நடத்தியது. முன்னதாக கோவிலில் பூஜை செய்து வேட்டி, துண்டு மற்றும் பரிசு பொருட்களுடன் கிராம மக்கள் தொழுவை வந்தடைந்தனர். தொடர்ந்து கோவில் காளைகளுக்கு வேட்டி, துண்டு, மாலை அணிவித்து முதலில் மஞ்சுவிரட்டு தொழுவில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

பின்னர் ஒவ்வொரு காளைகளாக மஞ்சுவிரட்டு தொழுவில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. அனைத்து காளைகளுக்கும் கிராம மக்கள் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

5 பேர் மீது வழக்கு

போட்டியின் போது சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை மாடு பிடி வீரர்கள் துரத்தி சென்று பிடித்தனர். அதில் சில காளைகள் பிடிபட்டும், பல காளைகள் பிடிபடாமலும் தப்பியோடியது. அதில் 5 பேர் படுகாயமும், 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயமும் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் அனுமதியின்றி இந்த மஞ்சுவிரட்டு நடத்தியதாக உலகம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் உலகம்பட்டியை சேர்ந்த பெரியசாமி, செல்வம், புதுவாடி கிராமத்தை சேர்ந்த சக்தி வேல், படமிஞ்சி கிராமத்தை சேர்ந்த கனகு, ஆரணிபட்டி கிராமத்தை சேர்ந்த பெரியண்ணன் ஆகிய 5 பேர் மீது உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்