மணிமுக்தாற்று வெள்ளத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் மீட்பு

கல்வராயன்மலை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றில் சிக்கிய கல்லூரி மாணவர் மீட்கப்பட்டார்.

Update: 2022-12-12 18:45 GMT

கள்ளக்குறிச்சி அருகே அணைக்கரைகோட்டாலத்தில் 36 அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. இருப்பினும் அணையின் பாதுகாப்பு கருதி 34 அடி நிரம்பியதும் அதில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.

தற்போது அணையின் நீர் மட்டம் 34 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீா் அப்படியே மணிமுக்தாற்றில் திறந்துவிடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கல்வராயன்மலை மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள மட்டப்பாறை, எடுத்தவாய்நத்தம் போன்ற பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

உபரி நீர் வெளியேற்றம்

மேலும் சங்கராபுரம் அருகே கொசப்பாடி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதனால் மணிமுக்தாற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி 11 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே உபரி நீராக நேற்று அதிகாலை 4 மணிக்கு திறந்து விடப்பட்டது.

இதன்காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கரையோர கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மாணவர் மீட்பு

இந்த நிலையில் திருச்சி தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வரும் வடபூண்டி கிராமத்தை சேர்ந்த பரத் (வயது 20) என்பவர் நேற்று காலை 7 மணி அளவில் கண்டாச்சிமங்கலம் அய்யனார் கோவில் அருகே மணிமுக்தாற்றை கடக்க முயன்றார். ஆற்றின் நடுவில் சென்றபோது, அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் சீறிபாய்ந்து வந்தது.

இதனால் அவர் மழை வெள்ளத்தில் சிக்கி வெளியே வர முடியாமல் பரிதவித்தார். அப்போது அதிர்ஷ்டவசமாக ஆற்றின் நடுவே இருந்த ஒரு பாறையில் ஏறி நின்று கைகளை அசைத்து கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து வரஞ்சரம் போலீசார், தியாகதுருகம் மற்றும் கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் களம் இறங்கினர். கரையில் இருந்து கயிறு கட்டி சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வெள்ளத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

மற்றொரு சம்பவம்

இதே போல் கண்டாச்சிமங்கலத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் அதே பகுதியில் உள்ள மணிமுக்தாற்று தரைப்பாலத்தை மொபட்டில் கடக்க முயன்றார். அப்போது வெள்ளத்தில் அவரால் மொபட்டை இயக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் மொபட்டுடன் அவரை வெள்ளம் இழுத்தது. இதில் சுதாரித்து கொண்ட மகாலிங்கம் மொபட்டை வெள்ளத்தில் விட்டு,விட்டு கரையேறினார். 

Tags:    

மேலும் செய்திகள்