மணிமுக்தா அணை முழுகொள்ளளவை எட்டியது
தொடர்மழையால் கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி அருகே அணைக்கரைகோட்டாலத்தில் 36 அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. இருப்பினும் அணையின் பாதுகாப்பு கருதி 34 அடி நிரம்பியதும் அதில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
இந்த அணையின் மூலம் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கல்வராயன்மலையில் கடந்த 2 வாரங்களாக அவ்வபோது பெய்த மழை காரணமாக மணி மற்றும் முக்தா ஆறு வழியாகவும், ஆலத்தூர் பாப்பாக்கால் ஓடை வழியாகவும் அணைக்கு தண்ணீர் வந்தது. இதனால் 24 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து 27 அடியானது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
உபரி நீர் வெளியேற்றம்
இதனால் மணிமுக்தா அணையின் நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து நேற்று மாலை 34 அடியை எட்டியது. மேலும் அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி மணிமுக்தா அணையில் இருந்து மணிமுக்தா ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.