கிருஷ்ணகிரியில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது.
மாங்கனி கண்காட்சி
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலை வகித்தார்.
தோட்டக்கலை துறை இணை இயக்குனர் பூபதி வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், தளி ராமச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் உள்பட பலர் பேசினர்.
நலத்திட்ட உதவிகள்
விழாவில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை, நீர்வடிப்பகுதி துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 57 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 21 ஆயிரத்து 640 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த கண்காட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், தாய்லாந்து நாட்டை சேர்ந்த விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த மாங்காய்களை காட்சிபடுத்தியிருந்தனர்.
172 ரக மாங்காய்கள்
அதன்படி, ஏற்றுமதிக்கு உகந்த ரகங்களான அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, செந்தூரா, இமாம்பசந்த், மல்கோவா, நீலம், மல்லிகா மற்றும் பையூர்-1, சிந்து, பஞ்சவர்ணம், கெத்தாமர், நீலகோவா, பீத்தர், ஆஸ்டின், ரத்னா, ருமானி, சேலம் பெங்களூரா, பெங்களூரா, மல்லிகா, நாட்டி என 172 ரக மாங்காய்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.
அத்துடன் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், பார்வையாளர்களை கவரும் வகையில் ஏலக்காய், கிராம்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, பட்டாணி, ஜாதிக்காய், அன்னாசி பூ, ஜாதிகொட்டை, மிளகாய் விதைகள், கககசா போன்ற 14 வகையான நறுமண பொருட்களை கொண்டு யானை மாதிரியையும், பல்வேறு பூக்களை கொண்டு வண்ணத்துப்பூச்சி, ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் மாதிரி, மலர்களால் ஆன மாங்கனி ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தின்பண்ட அரங்கு
கண்காட்சியில் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு பொழுது போக்கு அம்சங்கள், தின்பண்டங்கள் அரங்குகள், பேன்சி பொருட்கள் அடங்கிய அரங்குகள், என ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்றைய கண்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) டேவிட் டென்னிசன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, துணை கலெக்டர் (பயிற்சி) தாட்சாயிணி, நகராட்சி ஆணையாளர் வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.