காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம்: மாங்கனிகளை வீசி பக்தர்கள் வழிபாடு

காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2023-07-02 06:55 GMT

காரைக்கால்,

இறைவனின் திருவா யால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய வரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்துவரும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மாங்கனித்திருவிழா கடந்த 30-ந் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. மாங்கனித் திருவிழாவின் 2-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.

திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கோலாகலமாக நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேல் கைலாசநாதர் கோவில் எதிரில், பவழக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா புறப்பட்டார். அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு வீட்டு வாசல், மாடி மற்றும் சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வீசி எறிந்தனர். இந்த மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஏராளமான பெண்களும் விழாவில் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்துச் சென்றனர்.

விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனி, பட்டு வஸ்திரங்கணை பிச்சாண்டவருக்கு படைத்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பவழக்கால் சப்பரம் காரைக்கால் பெருமாள் வீதி, பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி, லெமேர் வீதி வழியாக சென்று மீண்டும் பாரதியார் வீதி வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை வந்தடையும்.

இரவு, பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடை பெறும். நாளை (3-ந் தேதி) அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடை பெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் வாரியத்தலை வர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கில் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பி னர் ஜெயபாரதி மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர். விழாவிற் கான பாதுகாப்பு களை மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ் தலை மையில் ஏராளமான போலீ சார் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்