மாண்டஸ் புயல்: அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவு பாதிப்புகள் இல்லை - மு.க.ஸ்டாலின்

மாண்டஸ் புயல் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக புயலால் பெரிய அளவு பாதிப்புகள் இல்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.;

Update: 2022-12-10 07:41 GMT

சென்னை

மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், கடலோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

தென்சென்னையில் புயல் பாதித்த இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்

சென்னை காசிமேட்டில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதமடைந்த படகுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சென்னை, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 உணவு பொட்டலங்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை, பெருங்குடி பகுதியில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3000 உணவு பொட்டலங்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

மாண்டஸ் புயல் தொடர்பான அரசின் நடவடிக்கையில் மக்கள் திருப்தியாக உள்ளனர் என சென்னை காசிமேட்டில் ஆய்வு செய்தபின்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

இரவு, பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் விடிய விடிய, சிறப்பாக பணியாற்றினார்கள்.

பாதிப்புகள் குறித்து விடிய விடிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக புயலால பெரிய அளவு பாதிப்புகள் இல்லை.தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

புயல், மழை பாதித்த இடங்களில் இன்று மாலைக்குள் முழுமையாக மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும். புயல் சேத விவரங்கள் முழுமையாக கணக்கிட்ட பிறகு, உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும். தேவைப்பட்டால் ஒன்றிய அரசின் உதவி கோரப்படும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்