தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு விற்க கட்டாயம்: 'நாங்கள் விளைவிக்கும் பொருட்களை விருப்பப்பட்ட இடத்தில் விற்போம்' விவசாயிகள் திட்டவட்டம்

விவசாயிகள் திட்டவட்டம்

Update: 2022-11-05 19:30 GMT

நாங்கள் விளைவிக்கும் பொருட்களை எங்கள் விருப்பப்பட்ட இடத்தில் விற்போம், கரும்பை, குறிப்பிட்ட தனியார் ஆலைக்குதான் விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்.

கரும்பு விவசாயம்

ஈரோடு மாவட்டத்தில் கரும்பு பயிரை முக்கியமான பணப்பயிராக விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை என்று அனைத்து பாசனப்பகுதிகளிலும் கரும்பு சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு விளையும் கரும்புகள் அந்தந்த பகுதி சர்க்கரை ஆலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக விவசாயிகளின் விளைபொருட்களான மஞ்சள், நெல் போன்றவை விவசாயிகள் விரும்பும் இடத்தில் விற்பனை செய்யலாம். ஆனால், கரும்பு விற்பனையை பொறுத்தவரை பகுதி வாரியாக விவசாயிகள் எந்தெந்த சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது.

ஆலை மாற்றம்

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, சிவகிரி, அறச்சலூர், மொடக்குறிச்சியில் சில கிராம பகுதிகளில் விளையும் கரும்பு, கரூர் மாவட்டம் புகளூரில் உள்ள ஈ.ஐ.டி.பாரி (ஈஸ்ட் இந்தியா டிஸ்டிலரிஸ்) என்ற கரும்பு சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் அறச்சலூர் உள்வட்டத்தை சேர்ந்த அறச்சலூர், 24 வேலம்பாளையம் (60 வேலம்பாளையம்), எல்லைக்காட்டுப்பதூர், விளக்கேத்தி, கொல்லங்கோவில், வடுகப்பட்டி, முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, கொங்குடையான்பாளையம், கருமாண்டம்பாளையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உள்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் கரும்பை இனிமேல் ஈ.ஐ.டி. பாரி ஆலைக்கு வழங்க வேண்டாம். பூந்துறை சேமூரில் உள்ள இன்னொரு தனியார் கரும்பாலைக்குதான் விற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சர்க்கரைத்துறை ஆணையாளர் கடந்த 19-10-22 அன்று ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். இதுபற்றிய அறிவிப்பு சம்பந்தப்பட்ட 2 ஆலைகள் மற்றும் ஈரோடு மாவட்ட புகளூரு சர்க்கரை ஆலை கரும்பு வளர்ப்போர் சங்க நிர்வாகிகளுக்கும், வேளாண் துறை சார்ந்த அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

கோரிக்கை

இதுதொடர்பாக சங்கத்தை தொடர்பு கொண்டபோது அரசு உத்தரவு வந்திருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இதுபோலவே ஈ.ஐ.டி. பாரி ஆலை நிர்வாகமும் தங்களுக்கும் சர்க்கரைத்துறை ஆணையாளரின் உத்தரவு வந்திருப்பதை எடுத்துக்கூறி உள்ளனர். இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக விவசாயிகள் ஒருங்கிணைந்து கடந்த வாரத்தில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு கோரிக்கை மனுவை வழங்கினார்கள். அதில், அறச்சலூர் உள்வட்ட கிராமப்பகுதி விவசாயிகள் இப்போது போலவே ஈ.ஐ.டி. பாரி ஆலைக்கே வழங்குவோம். எங்களை வேறு நிறுவனத்துக்கு வழங்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறி இருந்தனர்.

கட்டாயப்படுத்தக்கூடாது

இதுவரை விவசாயிகளின் கோரிக்கை மனுவுக்கு எந்த பதிலும் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே அறச்சலூர் சுற்றுவட்டார கரும்பு விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்து விவசாயிகள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். விவசாயிகள் ஈ.ஐ.டி. பாரி ஆலையே எங்களுக்கு வேண்டும் என்கிறார்கள். இதற்கான காரணம் என்ன?.

இதுபற்றி வடுகப்பட்டி கருமாண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசு கூறியதாவது:-

எனக்கு 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 8 ஏக்கர் கரும்பு பயிரிட்டு இருக்கிறேன். எனது முக்கிய பயிராக கரும்பு உள்ளது. இதற்கு காரணம் ஈ.ஐ.டி. பாரி நிறுவனம்தான். கடந்த 1992-ம் ஆண்டு ஈ.ஐ.டி. பாரி தொடங்கப்பட்டது முதல் நான் கரும்பு விற்பனை செய்து வருகிறேன். விவசாயிகளின் உற்ற தோழனாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அரசு அறிவித்த விலையை விட கூடுதலாக தருகிறது. அதுமட்டுமின்றி, லாரி வாடகையை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். கரும்பு வெட்டிவிட்டால் 14 வது நாள் எங்களிடம் பணம் இருக்கும். நடவுக்கு வங்கி கடன் அவர்களே பெற்றுத்தருகிறார்கள். உரிய நேரத்தில் எங்களால் கடனை திரும்பிசெலுத்த முடிகிறது. இப்படி அனைத்தும் சரியாக சென்று கொண்டிருக்கும்போது வேறு நிறுவனத்துக்கு ஏன் எங்களை மாற்ற வேண்டும். கரும்பு உள்பட விவசாய பொருட்கள் எங்கள் விளைச்சல். அதை எங்கே விற்க வேண்டும் என்று விவசாயிகளாகிய நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதை கட்டாயப்படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேவை அறிந்து...

முகாசி அனுமன்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி சி.சண்முகம் கூறியதாவது:-

நான் 13 ஏக்கர் கரும்பு பயிரிட்டு இருக்கிறேன். எங்கள் தேவை என்ன என்று அறிந்து அதை அந்த நிறுவனம் சரியாக செய்கிறது. பணபட்டுவாடா விஷயத்தில் இதுவரை பிரச்சினை வந்தது இல்லை. இப்போதெல்லாம் கரும்புக்கரணை (விதை) நடவுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதுபற்றி நிறுவன நிர்வாகத்தில் கூறினால் உடனடியாக ஆட்கள் வருவார்கள். உழவு செய்து, பார் பிடித்து, கரணை நடவு செய்து தருவார்கள். அதற்கு உரிய தொகை எங்களிடம் இல்லை என்றால், வங்கி கடன் அடிப்படையில் போட்டுத்தருவார்கள். சொட்டு நீர் பாசனத்தையும் மானிய அடிப்படையில் போட்டுத்தருவார்கள். எங்கள் வேலை கரும்புக்கு தண்ணீர் சரியாக கட்டுவது மட்டும்தான். இப்படி எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் நிறுவனத்தை விட்டு இன்னொரு நிறுவனத்துக்கு கரும்பு கொடுங்கள் என்றால், எங்களால் முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

வருவாய் இழப்போம்

விளக்கேத்தி பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி கூறியதாவது:-

நான் 8 ஏக்கர் கரும்பு பயிரிட்டு இருக்கிறேன். நாங்கள் கரும்பு பதிவு செய்து விட்டால் அத்தனை வேலையையும் செய்து தருவதுடன், தேவைக்கு கடன் உதவியும் செய்கிறார்கள். கரும்பு அறுவடை முடிந்த 14 வது நாளில் கடன் தொகை போக மீதி பணம் கிடைக்கும். கரும்பு விவசாயிகள் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், எங்கள் விருப்பப்படியே விட்டு விடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தன்னிச்சையான முடிவு

கொல்லங்கோவில் கந்தசாமிபாளையத்தை சேர்ந்த விவசாயி எஸ்.சின்னுசாமி கூறிதாவது:-

எனக்கு தெரிந்த ஒரே விவசாய தொழில் கரும்பு விவசாயம்தான். கல்லூரி படிப்பு முடித்ததும் விவசாயத்தில் இறங்கிவிட்டேன். அதுமுதல் ஈ.ஐ.டி. பாரி நிறுவனத்துக்கு கரும்பு பதிவுசெய்து விடுவேன். தொழில் நன்றாகவே சென்றுகொண்டிக்கிறது. எங்களிடம் ஒரு ஆலோசனை கூட கேட்காமல் தன்னிச்சையாக ஒரு முடிவை சர்க்கரைத்துறை எடுத்து இருக்கிறது. இதுபோன்ற சர்வாதிகார போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உதவி

அறச்சலூர் ஓடாநிலை பகுதி விவசாயி வி.வசந்தா தேவி கூறியதாவது:-

எனது கணவர் வடிவேல் மறைந்து விட்டார். அவருக்கு பிறகு சுமார் 20 ஏக்கர் அளவுக்கு விவசாயம் செய்து வருகிறேன். இதில் 8½ ஏக்கர் கரும்பு நடவு செய்து உள்ளேன். ஒருமுறை எனது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.

ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தோம். கரும்பு வெட்டும் பருவம்தான் அது. ஆனால் என்னிடம் பணம் இல்லை. இதுபற்றி ஆலை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தேன். எனது நிலையை புரிந்துகொண்ட நிர்வாக உயர் அதிகாரி, உடனடியாக ஒரு கூட்டத்தை போட்டு, கரும்பு வெட்டிய உடன் பணம் என்று எனக்கு உதவி செய்தனர்.

ஒரு விவசாயிக்காக தங்கள் நடைமுறையை கூட மாற்றி உதவிசெய்த இந்த நிறுவனத்தை விட்டு என்னை வேறு நிறுவனத்துக்குபோக சொன்னால் அதை ஏற்க முடியாது. நான் மட்டுமல்ல, யாரும் இந்த நிறுவனத்தை விட்டு வரமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்து கேட்கவில்லை

அறச்சலூர் பாமக்கவுண்டன் வலசு பகுதியை சேர்ந்த விவசாயி எம்.மோகனா கூறியதாவது:-

நானும் எனது கணவர் மூர்த்தியும் 7 ஏக்கருக்கு மேல் கரும்பு நடவு செய்து இருக்கிறோம். திடீரென்று இன்னொரு ஆலைக்கு கரும்பு கொடுக்க சொல்கிறார்கள். எங்களிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை. அப்படியே கேட்டிருந்தாலும் நாங்கள் வேறு நிறுவனத்துக்கு செல்ல தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நிறுத்தி விடுவேன்

24 வேலம்பாளையம் (60 வேலம்பாளையம்) கிராமத்தைசேர்ந்த விவசாயி ஆனந்த மூர்த்தி கூறியதாவது:-

நான் பாரி நிறுவனத்துக்கு கரும்பு கொடுத்து வருகிறேன். இதுபோன்று எனது இன்னொரு தோட்டம் வேறு கிராமத்தில் இருக்கிறது.

அங்கு விளைந்த கரும்பை இன்னொரு ஆலைக்கு விற்று வந்தேன். சரியாக விலை கொடுப்பதில்லை. சரியான நேரத்துக்கு கொடுப்பதில்லை. பணம் இல்லை என்று பாண்டு பத்திரம் தருவார்கள். அதற்கான காலத்தில் பணம் கிடைக்காது. வங்கியில் கடன் பெற்றுத்தருவதை முறையாக செலுத்த மாட்டார்கள். இதனால் வங்கியில் கடனுக்கு வட்டி அதிகரிக்கும். இந்த பிரச்சினைகளால் தொடர் நஷ்டம் ஏற்பட்டு, அந்த இடத்தில் கரும்பு நடவையே விட்டு விட்டேன். இப்போது 4 ஏக்கர் பயிரிட்டு, பாரி நிறுவனத்துக்கு கொடுத்து, கடன்கள் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை ஆலை மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தினால், கரும்பு பயிரிடுவதை நிறுத்தி விடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

போராடுவோம்

முகாசி அனுமன்பள்ளி தேவணம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பி.சந்திரசேகரன் கூறியதாவது:-

கரும்பு 8 ஏக்கர் பயிரிட்டு இருக்கிறேன். விவசாயிகளை மதிக்காமல், இன்ெனாரு ஆலைக்கு எங்களை கரும்பு விற்கச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். நாங்கள் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இன்னும் விவசாயிகளை திரட்டி அரசின் முடிவுக்கு எதிராக போராடுவோம். ஆனால், இந்த அரசு எங்களை போராட்ட களத்தில் தள்ளாது என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகளின் இந்த பிரச்சினை அறச்சலூர் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பான விவாதப்பொருளாகவும் உள்ளது. கடந்த 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை கடுமையான வறட்சி இருந்த காலத்தில் வெறும் 440 ஏக்கர் மட்டுமே கரும்பு சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், அடுத்த ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பாரி நிறுவனம் செய்த உதவியால் தற்போது 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே நிறுவனம் மாற்றப்பட்டால் கடுமையாக எதிர்ப்பது. கட்டாயப்படுத்தினால் கரும்பு சாகுபடியை விட்டு விடுவது என்ற மனநிலையில்தான் விவசாயிகள் உள்ளனர்.

இதையும் மனதில் கொண்டு அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்