அப்துல்கலாம் மணிமண்டபத்துக்கு பார்வையாளர்கள் வருகை 1 கோடி
அப்துல்கலாம் மணிமண்டபத்துக்கு பார்வையாளர்கள் வருகை 1 கோடி ஆனது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பேய்க்கரும்பு பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் சார்பில் மணிமண்டப கட்டிடம் கட்டப்பட்டது. இந்த மணிமண்டப கட்டிடமானது கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப் பட்டது. ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டப கட்டிடத்திற்கு சென்று இங்குள்ள அவரது சாதனைகள் குறித்த புகைப்படங்களை பார்த்து விட்டு தான் திரும்பி செல்கின்றனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் பேய்க்கரும்பு பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டப கட்டிடத்திற்கு நேற்றுடன் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 1 கோடி பார்வையாளர்களின் வருகையை தாண்டி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்துல் கலாமின் குடும்பத்தி னரான அவரது பேரன் சேக் சலீம் மற்றும் குழந்தைகள்நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர். ஒரு கோடி பார்வையாளர்களை தாண்டி மணிமண்டப கட்டிடத்திற்கு முதல் பார்வையாளர்களாக வந்த 2 குழந்தை களுக்கும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு துறை அதிகாரிகள் பரிசு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 75-வது ஆண்டு சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் அப்துல் கலாம் மணிமண்டப கட்டிடத்திற்கு நேற்றுடன் பார்வையாளர்களின் வருகை ஒரு கோடியை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.