நீர் நிலைகளை பாதுகாக்க மேலாண்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்
இயற்கையாக அமையப்பெற்ற நீர் நிலைகளை பாதுகாக்க மேலாண்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் வளர்மதி கேட்டுக்கொண்டார்.
பசுமை குழுக்கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட பசுமை குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட ஈரநில மேலாண்மை குழுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நிலங்கள், அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, நெடுஞ்சாலை மற்றும் இந்து சமய அறநிலைத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் மரக்கன்றுகள் நட ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட தொழில் மையம் மூலமாக மாவட்டத்தில் செயல்படும் தனியார் தொழில் நிறுவனங்களை இதில் ஈடுபடுத்தி அந்த நிறுவன பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலாண்மை பணிகள்
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் மைய நாற்றங்கால், மரகத பூஞ்சோலை அமைக்க வேண்டும். தற்போதைய மழைக்காலத்தை பயன்படுத்தி அனைத்து அரசு துறைகளும் ஒன்றிணைந்து மரக்கன்றுகள் நடும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற மாவட்ட ஈரநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயற்கையாக அமையப்பெற்ற நீர் நிலைகளை பாதுகாக்க மேலாண்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று இயற்கையாக அமையப்பெற்ற ஏரி மற்றும் குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட ஈரநிலங்களை கண்டறிந்து அவற்றில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்றி மாசு ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும்.
சமூக ஆர்வலர்கள், பசுமை காப்பாளர்கள். நீர்நிலை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஈரநில நண்பர்கள் என்னும் அடையாள அட்டை வழங்கி ஒவ்வொரு வருடமும் சிறப்பாக செயல்படும் நபருக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்க உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட வன அலுவலர் கலாநிதி, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.