மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்தவருக்கு ஆயுள் தண்டனை-புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு

மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீா்ப்பளித்தது.

Update: 2023-03-14 18:49 GMT

மூதாட்டி கொலை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கடியாப்பட்டியை சேர்ந்த சேதுராமனின் மனைவி அழகம்மை (வயது 80). இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, சமையல் அறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

அவரை கொலை செய்த மர்ம ஆசாமி மூதாட்டி அணிந்திருந்த 6 பவுன் சங்கிலி மற்றும் 2 பவுன் காதணியை கொள்ளையடித்து சென்றிருந்தார். இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

இதற்கிடையில் கடந்த 2019-ம் ஆண்டு பொன்னமராவதி போலீசாரால் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த செல்வராஜ் (56) என்பவரை ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்தனர். அப்போது அவர் கடியாப்பட்டியில் அழகம்மையை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

இதையடுத்து திருமயம் போலீசார் செல்வராஜை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார்.

ஆயுள் தண்டனை

இதில் செல்வராஜூக்கு ஒரு பிரிவில் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதத்தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், மற்றொரு பிரிவில் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அதன்படி அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனையை செல்வராஜ் அனுபவிக்க உள்ளார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட செல்வராஜை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்