பனமரத்துப்பட்டி:-
கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 38). இவரும் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மாணவி கடந்த 2008-ம் ஆண்டு மேல் படிப்பிற்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார். சுபாஷும் காதலை தொடர்வதற்காக அங்கு வந்து தங்கி உள்ளார். அப்போது காதலர்கள் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். இதில் அந்த மாணவி கடந்த 2008-ம் ஆண்டு கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆட்டையாம்பட்டி போலீசார் சுபாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சுபாஷ் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து கடந்து 2013-ம் ஆண்டு சேலம் கோர்ட்டு சுபாஷிற்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. பின்னர் தனிப்படை போலீசார் சுபாசை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த சுபாசை நேற்று போலீசார் கைது செய்தனர்.