திருப்பூர்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி ஆகிய கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், புறநகர் மாவட்ட பொருளாளர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால், விடுதலை சிறுத்தை கட்சிகளின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முத்து, திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ் வேந்தன், திருப்பூர் தெற்கு பொறுப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அண்மைக்காலமாக தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளை தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான அமைப்புக்கள் திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது கோவையை மைய்யப்படுத்தி இந்த முயற்சிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சுகளும் நடைபெற்று வருகின்றன. இவற்றிற்கு காரணமான அனைவரையும் காவல்துறை விரைந்து கைது செய்து சிறைப்படுத்த வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் நச்சு அரசியலுக்கு இடமளிக்க வேண்டாமென தமிழக மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தநிலையில் சங்பரிவார்களின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையிலும், தமிழகத்தில் மதவெறிக்கு எதிராகவும், வன்முறைக்கு எதிராகவும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் மணிதசங்கிலி இயக்கம் நடத்துவது என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் மனித சங்கிலி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருப்பூர் மாநகரம், அவினாசி, ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், உடுமலை, பல்லடம் ஆகிய இடங்களில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த மனிதசங்கிலி இயக்கத்தில் அனைவரும் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.