டாஸ்மாக் கடையில் கத்தியை காட்டி மிரட்டி மது பாட்டில்கள் வாங்கியவர் கைது

டாஸ்மாக் கடையில் கத்தியை காட்டி மிரட்டி மது பாட்டில்கள் வாங்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-24 18:46 GMT

அரியலூர் மாவட்டம், மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை(வயது 48). இவர் சுமார் நான்கு ஆண்டுகளாக கல்லக்குடி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று கடையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த 3 பேர் பணம் கொடுக்காமல் மது பாட்டில்கள் கேட்டுள்ளனர். அப்போது மதுபாட்டில்கள் தர மறுத்த பிச்சைபிள்ளையை அவர்கள் தாக்கி கத்தியை காட்டி எங்களிடமே பணம் கேட்கிறாயா? என மிரட்டி பணம் கொடுக்காமல் மது பாட்டில்களை வாங்கி சென்று விட்டனர். இதுகுறித்து பிச்சைபிள்ளை கீழப்பழுவூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பணம் கொடுக்காமல் மிரட்டி மது பாட்டில் வாங்கிச் சென்ற 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் கார்த்திக்(23) என்பவரை போலீசார் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான அருங்கால் கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன் கோவிந்தராஜ், தஞ்சை மாவட்டம் அணைக்குடி கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி மகன் இளையராஜா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்