சேலத்தில் சில்லி சிக்கன் கடை ஊழியரை கத்தியால் குத்தியவர் கைது

சேலத்தில் சில்லி சிக்கன் கடை ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-10 21:40 GMT

கத்திக்குத்து

சேலம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் புதல்வன் (வயது 27). இவர் அந்த பகுதியில் உள்ள சில்லி சிக்கன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அந்த கடைக்கு கருங்கல்பட்டி தெற்கு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த முரளிதரன் (27) என்பவர் வந்தார். பின்னர் அவர் பணம் கொடுக்காமல் ஓசியில் சில்லி சிக்கன் கேட்டார். இதற்கு சதீஷ் புதல்வன் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது கடை ஊழியர்கள் முரளிதரனை சத்தம்போட்டு அங்கிருந்து விரட்டி விட்டனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த அவர் மீண்டும் அந்த கடைக்கு சென்றார். இதையடுத்து முரளிதரன் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை எடுத்து சதீஷ் புதல்வனை சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு 9 இடங்களில் கத்திக்குத்து விழந்தது.

கைது

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சதீஷ் புதல்வனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று முரளிதரனை போலீசார் கைது செய்தனர். இதனிடையே சதீஷ் புதல்வனை, முரளிதரன் கத்தியால் குத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்