பேக்கரி கடைக்காரரிடம் ரூ.50 லட்சத்தை வாங்கி ஏமாற்றியவர் கைது

பேக்கரி கடைக்காரரிடம் ரூ.50 லட்சத்தை வாங்கி ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-06 18:50 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள அமராவதிபுதூர் பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன் (வயது 54). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 அன்று அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் நாச்சியப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வேலு (54) என்பவர் நாச்சியப்பனை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறியும், மிரட்டியும் ரூ.50 லட்சத்திற்கு மேல் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாச்சியப்பன் கீரனூர் பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இந்த வழக்கை போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட நாச்சியப்பனின் மனைவி சகுந்தலா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாச்சியப்பன் மீது போடப்பட்ட போக்சோ வழக்கு புனையப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தள்ளுபடி செய்ய பரிந்துரையின் பேரில், அந்த வழக்கு தள்ளுபடியும் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மாயன், பரிமளம் ஆகிய இருவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அமராவதி புதூரை சேர்ந்த வேலு என்பவரையும் போலீசார் கைது செய்து புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்