ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் டாக்டர்-கணவரை தாக்கியவர் கைது
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் டாக்டர்-கணவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;
செந்துறை:
பெண் டாக்டர்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குமிழியம் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அரியலூரை சேர்ந்த டாக்டர் சத்யா பணியில் இருந்தார். இவருக்கு கைக்குழந்தை உள்ளதால், உதவிக்கு அவரது கணவர் சிலம்பரசனும் உடன் இருந்துள்ளார்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(வயது 37) என்பவர் தனது அக்காள் மகனை சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். டாக்டர் சத்யா, அந்த சிறுவனை பரிசோதனை செய்து விட்டு ஊசி போட முயன்றார். அப்போது அந்த சிறுவன் ஊசி போட மறுத்து சத்தம் போட்டுள்ளான்.
தாக்குதல்
இதனால் சுரேஷ் அருகில் இருந்த சிலம்பரசனிடம், சிறுவனை பிடிக்குமாறு கூறியுள்ளார். அதற்கு சிலம்பரசன், கையில் குழந்தை இருக்கிறது. எனவே வேறு நபரை அழைத்து வந்து பிடிக்க சொல்லுங்கள், என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட டாக்டர் சத்யாவை கடுமையாக திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில் சிலம்பரசனை தாக்கியதோடு, டாக்டர் சத்யா, சிலம்பரசனை சுரேஷ் செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டாக்டர் சத்யா இரும்புலிக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சுரேஷ் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தார்.
போராட்டம்
இந்த நிலையில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு, பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி அங்கு வந்து, தாக்குதலில் ஈடுபட்டவரை கைது செய்து உள்ளோம். உரிய விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி தக்க தண்டனை வாங்கி தரப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பேரில் அவர்கள் பணிக்கு சென்றனர். இதனால் சுகாதார நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.