அடகு கடை நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்தவர் 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது

அடகு கடை நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்தவர் 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது

Update: 2023-04-14 19:47 GMT

தஞ்சை அருகே அடகு கடை நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்தவரை 8 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

தந்தை-மகன் தலைமறைவு

தஞ்சையை அடுத்த சாலியமங்கலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தனியார் பெயரில் அடகு கடையை தஞ்சையை சேர்ந்த பழனியப்பனும்(வயது 80), அவரது மகன் தேவேந்திரனும்(51) நடத்தி வந்தனர். இவர்கள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணத்தை முதலீடாக சிறுசேமிப்பு மூலம் பெற்றனர்.

ஆனால் குறிப்பிட்ட காலம் கழித்து பொதுமக்களுக்கு முதிர்வு தொகை ஏதும் தரப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேவேந்திரனிடம் பணத்தை கேட்டனர். தொடர்ந்து அவர்கள் நெருக்கடி கொடுத்து வந்ததால் திடீரென ஒரு நாள் அடகு கடையை பூட்டிவிட்டு தந்தையும், மகனும் தலைமறைவாகி விட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரூ.5 கோடி மோசடி

ரூ.5 கோடி வரை சிறுசேமிப்பாக கட்டி ஏமாற்றம் அடைந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் இது தொடர்பாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கு தஞ்சை மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா, போலீஸ்காரர்கள் சுரேஷ், பிரபாகரன் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் பொதுமக்கள் பணத்துடன் தலைமறைவான தந்தை, மகனை கைது செய்ய தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

லாரி ஓட்டி வந்தார்

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு பழனியப்பன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து தேவேந்திரனை தேடியபோது அவர் சென்னையில் மாத சம்பளத்துக்கு லாரி ஓட்டி வந்தது தெரியவந்தது.

அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தஞ்சை மாதாக்கோட்டை பகுதிக்கு தேவேந்திரன் வந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

8 ஆண்டுகளுக்கு பிறகு கைது

அதன்படி போலீசார் விரைந்து சென்று 8 ஆண்டுகளுக்கு பிறகு தேவேந்திரனை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை மதுரையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நல கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி விசாரித்து தேவேந்திரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தேவேந்திரனை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்