மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 13½ அடி உயர்வு

குமரியில் பெய்து வரும் கனமழையால் மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 13½ அடி உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 110 மி.மீ. பதிவாகி உள்ளது.

Update: 2023-10-04 21:23 GMT

நாகர்கோவில்:

குமரியில் பெய்து வரும் கனமழையால் மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 13½ அடி உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 110 மி.மீ. பதிவாகி உள்ளது.

மயிலாடியில் 110 மி.மீ. மழை

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. தாழ்வான சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தொடர் மழை எதிரொலியால் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரம் பெய்த மழையில் அதிகபட்சமாக மயிலாடியில் 110 மி.மீ. பதிவாகியிருந்தது.

மழை அளவு

இதேபோல் மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை- 29.2, பெருஞ்சாணி- 67.8, சிற்றார் 1- 42, சிற்றார் 2- 46.4, பூதப்பாண்டி- 31.4, களியல்- 79, கன்னிமார்- 20.2, கொட்டாரம்- 62, குழித்துறை- 97.2, நாகர்கோவில்- 72.2, புத்தன்அணை- 63.2, சுருளோடு- 56.4, தக்கலை- 59.8, குளச்சல்- 26.4, இரணியல்- 18.2, பாலமோர்- 62.6, மாம்பழத்துறையாறு- 93.8, திற்பரப்பு- 26.6, ஆரல்வாய்மொழி- 10.4, கோழிப்போர்விளை- 84.5, அடையாமடை- 52.3, குருந்தன்கோடு- 28, முள்ளங்கினாவிளை- 57.8, ஆனைக்கிடங்கு- 94, முக்கடல்- 26 என பதிவாகி இருந்தது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களாக பலத்த மழை பெய்த நிலையில் நேற்று காலையில் இருந்து சாரல் மழை நீடித்தது. மாலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம்

அதே சமயத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை, மலையோர பகுதியான பாலமோரில் பலத்த மழை தொடர்ந்தது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 30.80 அடியாக உள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி அதிகரித்தது. தற்போது 57.85 அடியாக உள்ளது.

மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக மழை பெய்த பிறகும் உயராத நிலையில் தற்போது கொட்டி தீர்த்த மழையால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. அந்த வகையில் கடந்த 1-ந் தேதி அன்று 4.92 அடியாக இருந்த நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்த நிலையில் நேற்று 24.61 அடியாக இருந்தது. அதாவது 3 நாட்களில் 20 அடி உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 13½ அடி அதிகரித்தது.

இதேபோல் நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் 25 அடி கொள்ளளவு உடைய முக்கடல் அணையின் நீர்மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 5½ அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 12 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கனஅடி நீர் குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 10 அடியாக உள்ளது.

வெள்ள அபாயம்

மேலும், தலா 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, சிற்றார் 2 அணைகளின் நீர்மட்டம் 14 அடியை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணைக்கு நேற்று வினாடிக்கு 1,546 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 274 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,564 கன அடி தண்ணீர் வரத்தும், அணையில் இருந்து வினாடிக்கு 75 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 344 கனஅடி நீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 207 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 156 கனஅடி நீரும் வந்தது. சிற்றார் 1-ல் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சாலையில் தேங்கிய மழைநீர்

குமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் முன்சிறை ஊராட்சிக்கு உட்பட்ட மங்காடு பகுதியில் இருந்து முன்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதற்கு காரணம் இந்த சாலையின் இருபுறங்களிலும் முறையாக வடிகால் நீரோடைகள் அமைக்கப்படாததே காரணம் என இந்த பகுதியை சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் கடந்த ஆண்டு இதே போன்று மழை வெள்ள பாதிப்பின் போது தண்ணீர் இந்த பகுதியில் தேங்கி பலத்த சேதங்களை ஏற்படுத்தியதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. இதனை கண்டித்து போராட்டம் நடத்தினோம். அப்போது கண் துடைப்புக்காக சில நடவடிக்கையை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மீண்டும் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதாகவும், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகிறோம் என தங்களுடைய ஆதங்கத்தை பொதுமக்கள் தெரிவித்தனர்.

விளைநிலங்களுக்குள் புகுந்தது

இதேபோல் அழிக்கால் பிள்ளைதோப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் அங்குள்ள ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததையும் காண முடிந்தது.

மங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குளம் செல்லும் சாலை மற்றும் அந்த பகுதியை சுற்றியுள்ள சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தென்னை தோப்புக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது.

திற்பரப்பு அருவி

கோதையாற்றில் தண்ணீர் வரத்து சற்று குறைந்ததால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீரின் வேகம் குறைந்து தண்ணீர் விழுந்தது. இதனால் மாலை 4 மணிக்கு பிறகு அருவியின் ஒரு பகுதியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மோதிரமலை-குற்றியாறு வழித்தடத்தில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்ற வெள்ளம் குறைந்ததால் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

அதே சமயத்தில் தொடர் மழை காரணமாக ரப்பர் தோட்டங்களில் பால் வடிப்பு பணி நடைபெறவில்லை.

---------

Tags:    

மேலும் செய்திகள்