பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு விற்பனை செய்கிறது; காங்.தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே
காங்கிரஸ் அரசியல் அமைப்பை பாதுகாத்ததால் தான் மோடியால் பிரதமராக முடிந்தது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
மும்பை,
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் மராட்டியத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் நான்தெட்டில் ராகுல் காந்தியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-
காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்தது என்ன பா.ஜனதா தலைவர்கள் அடிக்கடி கேட்கின்றனர். காங்கிரசால் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாங்கள் அரசியல் அமைப்பை பாதுகாத்தோம். அதனால் இன்று நீங்கள் (மோடி) பிரதமராக முடிந்தது.
ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என பா.ஜனதா உறுதி அளித்தது. ஆனால் தற்போது அவர்கள் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகளை மட்டும் கொடுத்து உள்ளனர். 1¼ கோடி வேலைவாய்ப்புகள் எங்கே போனது?. மோடி அரசு விமானநிலையங்கள், துறைமுகங்களை விற்பனை செய்து வருகிறது. நாட்டின் சொத்துக்கள் ஒரு சிலரின் கைகளில் சென்றடைகிறது. காங்கிரஸ் உணவு பாதுகாப்பை கொடுத்தது. கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜனதா கொண்டு வந்த 10 திட்டங்களின் பெயரை அவர்களால் கூறமுடியுமா?. இவ்வாறு அவர் பேசினார்.