போதிய மழை இல்லாததால் வறண்ட மல்லல் கண்மாய்

முதுகுளத்தூர் அருகே போதிய மழை இல்லாததால் மல்லல் கண்மாய் தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டது. எனவே வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-10-06 18:45 GMT

முதுகுளத்தூர்,

பருவமழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனில் தான் ஓரளவு மழை பெய்யும். இந்த சீசனில் பெய்யும் மழையால்தான் மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய் மற்றும் ஊருணி உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பும். இந்த நீரை பயன்படுத்திதான் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விவசாயத்திற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதியளவு மழை பெய்யாததால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய் மற்றும் ஊருணிகளும் வறண்டு போய்விட்டன. இந்த நிலையில் முதுகுளத்தூர் அருகே உள்ள மல்லல் கிராமத்தில் உள்ள கண்மாயும் தண்ணீர் இல்லாமல் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக வறண்டு காணப்படுகிறது.

கோரிக்கை

அதுபோல் இந்த மல்லல் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு வைகை தண்ணீர் வரும் பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டு நீர்வரத்து பாதையும் அடைக்கப்பட்டு விட்டதால் இந்த கண்மாய்க்கு வைகை தண்ணீர் வரவில்லை. சரிவர பருவமழை பெய்யாத நிலை ஒரு புறம் இருக்க வைகை தண்ணீர் வராததால் மல்லல் கிராமத்தில் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளுக்கு தேவையான தண்ணீர் கிைடக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே மல்லல் கண்மாய்க்கு வைகை தண்ணீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் நீர்வரத்து பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மல்லல் கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்