மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் கோளாறு

மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து 1½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.;

Update: 2023-07-25 18:51 GMT

என்ஜினில் கோளாறு

மங்களூரில் இருந்து சென்னைக்கு தினமும் கரூர் வழியாக மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினமும் கரூர் ரெயில் நிலையத்திற்கு இரவு 7.53 மணிக்கு வந்து 7.55 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். இந்தநிலையில் மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று கரூர் ரெயில் நிலையத்திற்கு 7.47 மணிக்கு வந்தது. அப்போது ரெயில் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

இதனால் தொடர்ந்து ரெயிலை இயக்க முடியாமல் கரூர் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் இதுபற்றி கரூர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பயணிகள் கடும் அவதி

இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று என்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் என்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து பழுதடைந்த என்ஜினுக்கு பதிலாக மாற்று என்ஜினை பொருத்தி மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க முடிவு செய்தனர். அப்போது கரூர் ரெயில் நிலையத்தில் இருந்த சரக்கு ரெயிலின் என்ஜினை கொண்டு வந்து, மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொருத்தினர்.

இதையடுத்து 1½ மணி நேரம் தாமதத்திற்கு பிறகு கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9.23 மணிக்கு மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்