மடத்துக்குளம் பகுதியில் எந்திரங்கள் மூலம்மக்காச்சோளம்அறுவடை நடைபெற்று வரும் நிலையில், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இறவைப் பாசனம்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.பெரும்பாலும் இந்த பகுதிகளில் பருவமழையை அடிப்படையாகக் கொண்டு மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இதுதவிர இறவைப் பாசனத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது இந்த பகுதிகளில் விவசாயக் கூலி ஆட்களுக்கான பற்றாக்குறை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதனால் எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.அந்தவகையில் மக்காச்சோளத்தை எந்திரம் மூலம்அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதேநேரத்தில் விலை குறைவு விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.
படைப்புழுக்கள்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது'கால்நடை தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக உள்ளதால் ஆண்டு முழுவதும் மக்காச்சோளத்துக்கான தேவை உள்ளது.ஆனாலும் போதிய விலை கிடைக்காத நிலையே நீடித்து வருகிறது.பொதுவாக பருவமழைக் காலங்களில் உற்பத்தி அதிகரித்து விலை குறையும் வாய்ப்புள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு சீசன் இல்லாத நேரத்தில் சொட்டுநீர்ப் பாசனத்தில் சாகுபடி செய்துள்ளோம்.சாகுபடிப் பரப்பு குறைவாக உள்ளதால் படைப்புழுக்களின் தாக்குதல் அதிக அளவில் உள்ளது.இதனால் மருந்து தெளிப்பதற்கே அதிக அளவில் செலவு செய்துள்ளோம்.ஆனாலும் மகசூல் குறைவாகவே உள்ளது.கூலி ஆட்கள் பற்றாக்குறையால் எந்திரங்கள் மூலம் அறுவடை செய்கிறோம். இதில் தீவன இழப்பு சற்று அதிகமாக உள்ளது.அதேநேரத்தில் பணிகள் விரைவாக முடிகிறது. கடந்த காலங்களில் 100 கிலோ கொண்ட மக்காச்சோள மூட்டை ரூ 2800 வரை விற்பனையானது.தற்போது ரூ 2 ஆயிரத்துக்கும் குறைவாகவே விற்பனையாகிறது. உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் போதிய விலை இல்லாத நிலை விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே மக்காச்சோளத்துக்கு சீரான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இடைத்தரகர்களின் தலையீட்டால் விலை குறைவு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்'என்று விவசாயிகள் கூறினர்.