'ஒரு சில சம்பவங்களை மட்டும் கண்டனத்திற்குரியதாக மாற்றுவது இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது' - வானதி சீனிவாசன்
மணிப்பூர் சம்பவம் மனித நாகரீகத்திற்கு எதிரானது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை,
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பலர் இந்த கொடூர சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"மணிப்பூரில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த மனித நாகரீகத்திற்கும் எதிரானது. யாராலும் சகித்துக் கொள்ள முடியாத, ஜீரணிக்க முடியாத சம்பவம். எக்காரணம் கொண்டும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மன்னிக்க முடியாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அதே நேரம் இது போன்ற சம்பவங்கள் நாட்டின் எந்த இடத்தில் நடந்தாலும் கட்சி பாகுபாடின்றி அனைவரும் எதிர்க்க வேண்டும். ஒரு சில சம்பவங்களை மட்டும் கண்டனத்திற்குரியதாக மாற்றுவதும், இதே போல் மற்ற சம்பவங்கள் நடக்கும் போது அமைதியாக வேடிக்கை பார்ப்பதும் அரசியல் கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.
இந்தியாவில் எந்த இடத்தில் ஒரு பெண் பாதிக்கப்பட்டாலும், அவர்களின் பாதுகாப்பிற்காக, உரிமைக்காக பா.ஜ.க.வின் குரல் அரணாக நிற்கும்" என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.