திருச்சி காவிரி பாலத்தில் ரூ.6¾ கோடியில் பராமரிப்பு பணிகள்

திருச்சி காவிரி பாலத்தில் ரூ.6 கோடியே 87 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளதையொட்டி பாலத்தில் விரைவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-04 19:27 GMT

திருச்சி காவிரி பாலத்தில் ரூ.6 கோடியே 87 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளதையொட்டி பாலத்தில் விரைவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி பாலம்

திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1976-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டு தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பாலத்தில் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள், பஸ்கள், வேன், கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் என பல்வேறு வகையான வாகனங்கள் சென்று வருகின்றன.

சில ஆண்டுகளாக பாலத்தை தாங்கும் தூண்களில் ஏற்பட்ட இடைவெளி மற்றும் விரிசல் காரணமாக வாகன போக்குவரத்துக்கு அவ்வப்போது இடையூறு ஏற்பட்டது. இந்த பாலம் சீரமைப்பு பணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் ரூ.1 கோடியே 35 லட்சமும், 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.35 லட்சமும், செப்டம்பரில் ரூ.15 லட்சமும், 2018-ம் ஆண்டு நவம்பரில் ரூ.80 ஆயிரமும் செலவிடப்பட்டது.

போக்குவரத்து மாற்றம்

கடந்த ஆட்சியின்போது, நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தபோது, பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் முடிந்துவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளாலும் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டியது தெரியவந்தது. இதனால் இந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனை முடிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே காவிரி பாலத்தில் போக்குவரத்துக்கு ஏற்றபடி, ரூ.6 கோடியே 87 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக போக்குவரத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக கலெக்டர் பிரதீப்குமார், நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து, போலீஸ் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து நேற்று காலை கலெக்டர் பிரதீப் குமார் காவிரி பாலத்தில் நேரடியாக ஆய்வு நடத்தினார். அப்போது வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அன்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளநிலையில் சிந்தாமணியில் இருந்து செல்லும் வாகனங்கள் ஓடத்துறை, ஓயாமரி வழியாக சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக சென்று மீண்டும் அதே வழியில் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்