கல்லூரி தொடங்க உள்ள கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

தஞ்சை அருகே பூதலூரில் கல்லூரி தொடங்க உள்ள கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-07-04 20:57 GMT

திருக்காட்டுப்பள்ளி;

தஞ்சை அருகே பூதலூரில் கல்லூரி தொடங்க உள்ள கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கல்லூாி

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் நடப்பு ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து ஆன்லைன் மூலமாக கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர். தமிழக அரசு அறிவித்தது போல திருக்காட்டுப்பள்ளியில் தொடங்க இருக்கும் கலை அறிவியல் கல்லூரி தற்காலிகமாக பூதலூர் கூட்டுறவு காலனி பகுதியில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வர்ணம் பூசும் பணி

பூதலூரில் கலை அறிவியல் கல்லூரி செயல்பட உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய கட்டிடம் முழுமையாக சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டிடத்தின் உள்பகுதியில் சிதிலமடைந்த சில பகுதிகளில் சிமெண்டு பூச்சு வேலைகளும், உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவ மாணவியருக்கு கழிவறை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இருக்கைகள்

கல்லூரி மாணவர்கள் வகுப்புகளில் அமர்ந்து படிப்பதற்காக டான்சி நிறுவனத்திலிருந்து இருக்கைகள் முதல் கட்டமாக வந்து உள்ளன. கல்லூரி தொடங்குவதற்குள் இருக்கைகள் முழுவதுமாக வந்து விடும் என முதல்வர் ராஜா வரதராஜா தெரிவித்தார். 7-ந் தேதி(வியாழக்கிழமை) ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய கடைசி நாள் என்பதால், அதன் பின்னர் திருக்காட்டுப்பள்ளி கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்து எவ்வளவு விண்ணப்பங்கள் வந்துள்ளன என்பது தெளிவாக தெரிய வரும்.

Tags:    

மேலும் செய்திகள்