மகாமுத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

மகாமுத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-05-01 19:56 GMT

கல்லக்குடி:

கல்லக்குடி முத்துமாரியம்மன் நகரில் உள்ள மகாமுத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 21-ந் தேதி காலை முகூர்த்தக்கால் நடப்பட்டு, கொடியேற்றத்துடன், காப்பு கட்டி திருவிழா தொடங்கியது. அன்று இரவு அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலில் அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. கடந்த 28-ந் தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் மகா அபிஷேகமும், மாலையில் மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், இரவில் ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதியுலாவும் நடைபெற்றது. அப்போது பக்தர்கள், பொதுமக்கள் அவரவர் வீடுகளுக்கு முன்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏரிக்கரையில் இருந்து தீர்த்தம், பால்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது அம்மன் வேடமணிந்தவர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மகா அபிஷேகம், இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பொங்கல், மாவிளக்கு வைத்தல், அம்மனுக்கு விசேஷ பூ அலங்காரத்துடன் அன்னதானமும், இரவில் குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரத்துடன், தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தில் கல்லக்குடி பேரூராட்சி தலைவர் பால்துரை, துணைத்தலைவர் மோகன், டால்மியாபுரம் ஷைன்லயன் சங்க சாசன தலைவர் ஜான், கல்லக்குடி லயன் சங்க சாசன தலைவர் சேரன் மற்றும் கல்லக்குடி, மேலரசூர், கீழரசூர், கல்லகம், முதுவத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து ஓம்சக்தி, பராசக்தி என்று கோஷமிட்டபடி இழுத்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இன்று(செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவையொட்டி இன்னிசை, வாண வேடிக்கைகள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம காரியஸ்தர்கள் மற்றும் திருப்பணி குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்