மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
திருக்கடையூர் அருகே மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீமிதி திருவிழா
திருக்கடையூர் அருகே டி. மணல்மேடு கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் மகாமாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதையடுத்து நேற்று மாலை மார்க்கண்டேயர் கோவிலில் இருந்து கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க மெயின் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடந்தது.
புஷ்ப பல்லக்கில் வீதிஉலா
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முன்னதாக திருக்கடையூர் ஆனைகுல கரையில் உள்ள எதிர்காலீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை டி.மணல்மேடு கிராமத்தினர் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.