மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட மேம்பால திட்டம் : மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல்

மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2023-02-02 07:50 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, 1,815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்த வந்த அதிமுக ஆட்சியால் திட்டம் தடை செய்யப்பட்ட நிலையில், கூடுதல் நிதி மற்றும் செயல் திட்டங்களின் மூலம் மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மீண்டும் திட்டம் செயல்பாட்டிற்கு வருகிறது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மே மாதம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி 20.5 கிலோ மீட்டர் நீளத்துக்கு துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் மேம்பால சாலை திட்டம் ரூ.5,800 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான ஈரடுக்கு உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு தற்போது அனுமதி அளித்துள்ளது. மேலும், உயர்மட்ட பாலத்திற்காக எழுப்பப்படும் பில்லர்களால் மழை மற்றும் சாதாரண காலங்களில் நீரோட்டத்திற்கு தடை ஏற்பட கூடாது எனவும் பாலம் அமைக்க தற்காலிகமாக அமைக்கப்படும் கட்டமைப்புகள் பணிகள் முடிந்த ஒரு மாதத்திற்குள் அகற்றப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், கட்டுமானத்தின் போது அகற்றப்படும் கழிவுகளை நீர் நிலையிலோ அல்லது அதற்கு அருகிலோ கொட்டக் கூடாது எனவும் நிபந்தனை விதித்து திட்டத்திற்கு அனுமதி வழங்கி மத்திய அரசுக்கு சுற்றுசூழல் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது

மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், அமஞ்சிகரை, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை வழியாக இப்பாலம் துறைமுகத்தை சென்றடைய உள்ளது. சுற்றுசூழல் நிபுணர் குழுவின் நிபந்தனைகளுடன் விரைவில் பணியை தொடங்கி அடுத்த 30 மாதங்களுக்குள் பணியை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்