மதுரை திருமோகூரில் வாலிபரை அரிவாளால் வெட்டிய கும்பல்- பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை திருமோகூரில் வாலிபரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-03 22:16 GMT


மதுரை திருமோகூரில் வாலிபரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரில் கடந்த மாதம் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, குடியிருப்புகள், மோட்டார் சைக்கிள்கள் சூறையாடப்பட்டன. இது தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து 18 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 29) என்பவர் நேற்று, அந்த பகுதியில் உள்ள திண்டியூர் கண்மாய்க்குச் சென்றார். அப்போது அங்கு வந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றது. இதில் பலத்த காயமடைந்த பிரபு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பொதுமக்கள் மறியல்

பிரபுவை வெட்டிவிட்டு தப்பிச்சென்றவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், அந்த சமூக மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், இந்திரா காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் திருமோகூர் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தாக்குதல் நடத்தியவர்கள் விரைவாக கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருவதையடுத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்