இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு மதுரை போலீஸ் சம்மன்...!
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டுள்ளதாக மதுரை போலீஸ் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.;
மதுரை,
மதுரை, விக்கிரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவர் பால் பண்ணை உரிமையாளர். இவரது வீட்டில் கடந்த 16-ம் தேதி அன்று மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். இந்த சம்பவத்தில் வீட்டுக்குள் சுமதி மயங்கி கிடந்தார். படுகாயமடைந்திருந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது எக்ஸ் சமூக வலை தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவில், குண்டு வீச்சு, கள்ளத் துப்பாக்கி, வீச்சருவாள், கத்தி, பெருகிவரும் ஆயுதக் கலாச்சாரம், சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு, திமுக ஆட்சியில் அச்சத்தில் மக்கள், என்று பதிவிட்டிருந்தார்.
போலீசார் விசாரணையில் இந்த சம்பவம் குடும்ப தகராறினால் நடத்தப்பட்டது என தெரியவந்தது. எனவே, குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் குண்டு வீசியதை சட்டம் ஒழுங்கு பிரச்னை போல பதிவிட்டிருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை, செக்கானூரணி காவல் நிலையத்தில் நாளை அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட எஸ்.பி. சம்மன் அனுப்பி உள்ளார்.