மதுரை போலீஸ் கமிஷனர்-2 சூப்பிரண்டுகள் ஐகோர்ட்டில் ஆஜர்

முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின் போது மதுரை போலீஸ் கமிஷனர்-2 சூப்பிரண்டுகள் ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.

Update: 2022-06-27 20:39 GMT


திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் வக்பு வாரிய ஊழியரை பணியை செய்யவிடாமல் தடுத்து, மிரட்டியதாக 2 பேர் மீது வத்தலக்குண்டு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு அவர்கள் இருவரும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதேபோல மதுரை செல்லூர் பகுதியைச்சேர்ந்த மூவேந்திரபாண்டியன், பஞ்சவர்ணம், லட்சுமி ஆகியோர் மீது பதிவான வழக்கிலும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பானு என்பவர் மற்றொரு வழக்கிலும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி வேல்முருகன், மனுதாரர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அவர்கள் சில வாரங்கள் கழித்து மீண்டும் இந்த முன்ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதுவரை அவர்களை கைது செய்யாமல் போலீசார் மெத்தனமாக உள்ளனர் என்று கூறி, இதுகுறித்து விளக்கம் அளிக்க மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகள் நேரில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி வேல்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் நீதிபதி முன்பு நேரில் ஆஜரானார்கள். பின்னர் மேற்கண்ட வழக்குகளில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரை தேடிவருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனுக்களை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்