மதுரை எம்.பி. குறித்து அவதூறாக பதிவிட்டதாக வழக்கு: சென்னையில் கைதான பா.ஜனதா மாநில நிர்வாகி மதுரை சிறையில் அடைப்பு- போலீஸ் வாகனத்தை மறித்து கட்சியினர் கோஷம்
மதுரை எம்.பி. குறித்து அவதூறாக பதிவிட்டது தொடர்பான வழக்கில், சென்னையில் கைதான பா.ஜனதா மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை எம்.பி. குறித்து அவதூறாக பதிவிட்டது தொடர்பான வழக்கில், சென்னையில் கைதான பா.ஜனதா மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
எம்.பி. குறித்து கருத்து
மதுரை தொகுதி எம்.பி.யாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன் உள்ளார். இவர் குறித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குறித்தும், இருதரப்பினர் இடையே மோதலை தூண்டும் வகையிலும் கடந்த 7-ந் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை பா.ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் எஸ்,ஜி.சூர்யா பதிவிட்டதாக கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், சைபர்கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த புகாரில், எஸ்,ஜி.சூர்யாவை கைது செய்ய உதவி கமிஷனர் சக்கரவர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் ெசன்னை சென்று நேற்று முன்தினம் இரவில் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்து, நேற்று காலை மதுரை அழைத்து வந்தனர்.
நீதிபதி முன் ஆஜர்
பின்னர் அவரை ரேஸ்கோர்ஸ் காலனியில் உள்ள மதுரை விரைவு கோர்ட்டு நீதிபதி ராம்சங்கரன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர் முன்பு ஆஜர்படுத்தினர். அதை தொடர்ந்து சுமார் 3 மணி நேரமாக வாதம் நடந்தது.
போலீசார் தரப்பிலும், எஸ்.ஜி.சூர்யா தரப்பு வக்கீல்களும் வாதிட்டனர். அதைதொடர்்ந்து, எஸ்.ஜி.சூர்யாவை வருகிற 1-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடைேய பா.ஜனதாவினர் திரண்டனர். எனவே போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் உடனடியாக குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிபதி உத்தரவின்படி, பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, போலீஸ் வாகனத்தில் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, அங்கு குவிந்திருந்த பா.ஜனதா கட்சியினர் சிறிதுநேரம் போலீசாரின் வாகனத்தை மறைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
சிறையில் அடைப்பு
போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதற்கிடையே எஸ்.ஜி.சூர்யா நிருபர்களிடம் கூறும்போது, "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உரிய பாடம் புகட்டப்படும்" என்றார். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.