மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - 2-ந் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் வருகிற 2-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் வருகிற 2-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் ஆண்டிற்கு 365 நாட்களில் 294 நாட்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு வேறு எந்த கோவிலும் இல்லை. இதில் பிரம்மோற்சவ விழா தான் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவாகும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த விழா 12 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் தான் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், சுந்தரேசுவரர் சாமியை எதிர்த்து போரிடும் திக்குவிஜயம், மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரை திருமணம் செய்து கொள்வது, திருத்தேர் வீதி உலா என முக்கிய விழாக்கள் இடம் பெற்று இருக்கும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேசுவரர் சன்னதி முன்பு உள்ள கம்பத்தடி மண்டபத்தில் 62 அடி உயர தங்க கொடிமரம் அமைந்துள்ளது. விழாவையொட்டி அந்த பகுதி முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சித்திரை திருவிழாவிற்காக சரவணன் பட்டர் காப்பு கட்டியிருந்தார்.
கொடியேற்றம்
இந்த நிகழ்வுக்காக மீனாட்சி, சுந்தரேசுவரர், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் கொடிமரத்திற்கு முன்பு எழுந்தருளினார்கள். அங்கு ஸ்தானிக பட்டர்கள் ஹலாஸ், செந்தில் ஆகியோர் தலைமையில் பட்டர்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேள தாளங்கள் இசைக்க காலை 10.35 மணிக்கு மிதுன லக்கனத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அப்போது கோவில் ஓதுவார்கள் அவினாசி, சிவராமன், ரவீந்திரகுமார், குமரகுரு ஆகியோர் தேவார, திருமந்திரங்கள் மற்றும் கொடி பாடல்களை பாடினார்கள். கொடியேற்றத்தின் போது மேலே இருந்து பூக்கள் தூவப்பட்டது. இதைதொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சுவாமி, அம்மனும் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து கோவிலுக்குள் குலாலர் மண்டகப்படியில் எழுந்தருளினர்.
கற்பக விருட்சம்-சிம்ம வாகனம்
சித்திரை திருவிழா நடைபெறும் 12 நாட்களும் சுவாமியும், அம்மனும் நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர்.அதன்படி நேற்று இரவு 7 மணிக்கு மேல் சுவாமி கற்பக விருட்சத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்தனர்.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி பட்டாபிஷேகம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. மே 1-ந் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திக்குவிஜயம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக மே 2-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். அடுத்த நாள் 3-ந் தேதி தேரோட்டம் நடைபெறும். மே 4-ந் தேதியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறும். முக்கிய விழாவான மே 5-ந் தேதி சித்திரை பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஸ்சேகர், போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர், மேயர் இந்திராணி, போலீஸ் துணை கமிஷனர்கள் சாய்பிரனீத், அரவிந்த், மாநகராட்சி கமிஷனர், இந்து சமய மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, கோவில் துணை கமிஷனர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.