மதுரை-காசி இடையே ஆன்மீக சுற்றுலா ரெயில்: மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்

மதுரை-காசி இடையே ஆன்மீக சுற்றுலா ரெயில் இன்று மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டது.

Update: 2022-07-23 09:34 GMT

மதுரை,

வருகிற ஆடி அமாவாசை அன்று முன்னோர் நினைவாக தர்ப்பணம் கொடுக்கும் வகையில் மதுரை-காசி இடையே ஆன்மீக சுற்றுலா ரெயில் இன்று (23-ந்தேதி) இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மதுரையில் இருந்து இந்த ரெயில் இன்று மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டது.

முன்னதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், புதுடெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், விஜயவாடா வழியாக காசி செல்லும். அப்போது ஆந்திர மாநிலத்தின் 7 சக்தி பீடங்களான பீதாம்புரம் புருகுதிகா தேவி மற்றும் பூரி பிமலாதேவி, ஜஜ்பூர் பிரஜாதேவி, கல்கத்தா காளி, கயா மங்கள கவுரி, காசி விசாலாட்சி, பிரயாக்ராஜ் அலோப் தேவி ஆகிய கோவில்களுக்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

அதன் பிறகு பாதகயா, நாபிகயா மற்றும் சிரோ கயாவில் ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து பூரி ஜெகநாதர் கோவில், கொனார்க் சூரியனார் கோவில், கொல்கத்தா பேலூர் மடம், விக்டோரியா மெமோரியல், விஷ்ணு பாத தரிசனம் ஆகியவற்றை கண்டுகளிக்க உள்ளனர். அதன் பிறகு காசி கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், அன்ன பூரணியை தரிசனம் செய்கின்றனர். நாகபஞ்சமி அன்று விஜயவாடா கிருஷ்ணா நதியில் நீராடி, கனகதுர்கா தரிசனத்துடன் சுற்றுலா நிறைவு பெறுகிறது.

இது 12 நாள் சுற்றுலா ஆகும். இதில் பங்கேற்க ஒரு நபருக்கு முறையே ரூ. 21,500, ரூ.23,600, ரூ.31,400 என்று 3 வகைகளில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மதுரை-காசி சுற்றுலா ரெயிலில் 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சமையல் பெட்டிகள், இரண்டு சரக்கு பெட்டிகள் ஆகியவை இணைக்கப்பட்டு உள்ளது. மதுரையில் இருந்து ஷீரடி, சனிசிக்னாபூர், த்ரயம்பகேஷ்வர், பஞ்சவடி, பண்டரிபூர், மந்திராலயம் ஆகிய ஆன்மீக தலங்களை இணைத்து ஒரு சுற்றுலா ரெயில் அடுத்த மாதம் 23-ந் தேதி இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மதுரையில் இருந்து கோவா, மும்பை, அமிர்தசரஸ் பொற்கோவில், ஜெய்ப்பூர், அஜ்மீர் ஆகிய சுற்றுலா தலங்களை இணைத்து ஒரு சுற்றுலா ரெயில் செப்டம்பர் 2-ந் தேதி இயக்கப்பட உள்ளது. மேற்கண்ட சுற்றுலா ரெயில்களுக்கான பயணச்சீட்டுகளை www.ularail.com இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். அல்லது அலைபேசி எண்: 7305858585 நம்பரை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்