மதுரை மாட்டுத்தாவணியில் அமைகிறது ரூ.600 கோடியில் 'டைடல் பூங்கா'

மதுரையில் நேற்று 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' மாநாடு நடந்தது. இதில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடி செலவில் 'டைடல் பூங்கா' அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

Update: 2022-09-16 19:55 GMT

மதுரையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற மண்டல மாநாடு நடந்தது.

விருதுகள்

இந்த மதுரை மேரியாட் ஓட்டலில் நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.

சிறப்பாக செயல்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். மேலும் அவர் தொழில் நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், "தமிழ்நாடு பதிவுச்சட்ட திருத்தம்" செய்து, அதற்கான ஆன்லைன் வசதியும், வாடகை ஒப்பந்த பத்திரத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதியினையும் தொடங்கி வைத்தார்.

இதைதொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிட்கோ நிறுவனத்தின் ஆன்லைன் சேவைகள், கரூர் மாவட்டம், புஞ்சைகாளகுறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.1.93 கோடி செலவிலும், ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பொதுவசதிக் கட்டிடங்கள், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம், கேர் திட்டம், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி(தாய்கோ) மூலம் கடனுதவி வழங்குதல், தமிழ்நாடு அரசு கடன் உத்தரவாத திட்டம் உள்ளிட்டவற்றையும் தொடங்கி வைத்தார்.

பாண்டியர் காலம்

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தொழில் வளர்ச்சி என்கிறபோது அது பெரிய தொழில்கள் மட்டுமல்ல, குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களையும் உள்ளடக்கியதுதான். இந்த தொழில்கள் மூலமாகத்தான் ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும், பல லட்சம் குடும்பங்கள் வாழும். அந்த அடிப்படையில் இவற்றின் வளர்ச்சியை தமிழக அரசு முக்கியமானதாக கருதுகிறது.

தமிழ் வளர்த்த மதுரை, இன்று தொழில் வளர்ப்பதிலும் முன்னணியில் விளங்குகிறது. பரவலான வளர்ச்சியே பார்போற்றும் வளர்ச்சி, சமச்சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி என்பதை உறுதி செய்திடக்கூடிய வகையில் கடந்த ஜனவரி மாதம் தென் தமிழகத்தில் தூத்துக்குடியில் தொழில் துறை சார்ந்த மாநாடு நடத்தப்பட்டது. தற்போது மதுரையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் "தோள் கொடுப்போம் தொழில்களுக்கு" என்ற முழக்கத்தோடு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சிறுமலை வாழைப்பழம்

மதுரை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளன. இதன் மூலம் 3 லட்சத்து 37 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. சுங்கடி சேலைகள், ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள், அப்பளம் ஆகியவற்றின் உற்பத்திக்கு மதுரை பெயர் பெற்றது. தமிழ்நாட்டின் தனித்தன்மையான பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக, புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தென் தமிழ்நாட்டைச் சார்ந்தவை.

அவை நாகர்கோவிலில் கோவில் நகைகள், ஈத்தாமொழி நெட்டை தென்னை, விருப்பாச்சி மலை வாழைப்பழம், சிறுமலை மலை வாழைப்பழம், பத்தமடை பாய்கள், மதுரை மல்லிகை, திண்டுக்கல் பூட்டுகள், ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப் பூண்டு, மதுரை சுங்கடி, அலைப்பை பச்சை ஏலக்காய், கன்னியாகுமரி கிராம்பு, மலபார் மிளகு, காரைக்குடி கண்டாங்கி சேலை, ஈஸ்ட் இந்தியா லெதர், செட்டிநாடு கோட்டான் என்கின்ற பனை ஓலைக் கூடைகள் ஆகும். இதை நான் இங்கு பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்துள்ள 25 வகையான பொருட்களில் கம்பம் பன்னீர் திராட்சை, உடன்குடி பனங்கற்கண்டு, தூத்துக்குடி மக்ரூன், சோழவந்தான் வெற்றிலை, மார்த்தாண்டம் தேன் உள்பட 14 வகையான பொருட்கள் தென் தமிழகத்தை சேர்ந்தவை. இந்த பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

தொழில் வளர்ச்சி

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வண்ணம் மாநில அளவில் சிறந்த தொழில்முனைவோர் விருது, மாநில அளவில் சிறந்த வேளாண்சார் தொழில் நிறுவனத்திற்கான விருது, மகளிர் தொழில்முனைவோர் விருது, தரம் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திற்கான விருது, சிறப்புப்பிரிவைச் சேர்ந்த சிறந்த நிறுவனத்திற்கான விருதுகள் என்னால் வழங்கப்பட்டுள்ளன..

வாடகை ஒப்பந்த பத்திரத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சொத்து பிணையில்லா கடன் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம் என்கின்ற பிரத்யேக திட்டம் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் இத்திட்டத்தின் கீழ், 81 நிறுவனங்களுக்கு ரூ.20 கோடியே 13 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

விளாச்சேரி பொம்மை

இந்த வரிசையில் தற்போது மதுரை மாவட்டம் விளாச்சேரி பொம்மைக் குழுமம், தூத்துக்குடி ஆகாயத்தாமரைக் குழுமம், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மகளிர் நெசவுக் குழுமம் ஆகிய குழுமங்கள் ரூ.9 கோடியே 5 லட்சம் அரசு மானியத்துடன் ரூ.9 கோடியே 82 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைப்பதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் காஞ்சீபுரம் நரிக்குறவர் பாசிமணி குழுமம், நெல்லையில் சமையல் பாத்திரக்குழுமம், திருப்பத்தூரில் ஊதுபத்திக் குழுமம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மரச்சிற்பக் குழுமம், கிருஷ்ணகிரியில் மூலப்பொருட்கள் கிடங்கு குழுமம், ஈரோட்டில் மஞ்சள்தூள் உற்பத்திசெய்யும் குறுந்தொழில் குழுமம், ஈரோடு மாவட்டம், பவானியில் ஜமுக்காளம் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமம் ஆகிய குழுமங்களுக்கு பொது வசதி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவையில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கடந்த மாதம் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மேற்கு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் ெநல்லை, தென்காசி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களிலுள்ள கயிறுத்தொழில் நிறுவனங்கள் பயனடையும். நாட்டில் எளிமையாக தொழில் புரிதல் பட்டியலில் தமிழ்நாடு 14-வது இடத்தில் இருந்து, இப்போது 3-வது இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறது. அடுத்து முதல் இடத்தை பிடிப்பதே நமது இலக்கு. அதேபோல், ஸ்டார்ட் அப் இந்தியா வெளியிட்ட தரவரிசை பட்டியலில் பல படிகள் முன்னேறி அரசின் சிறந்த புத்தொழில் செயல்பாடுகளுக்கான 'லீடர்' அங்கீகாரத்தை தற்போது பெற்று இருக்கிறது. தமிழ்நாட்டை 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்கின்ற இலக்கை அடைய, ஏற்றுமதி வர்த்தகம் முக்கியமாகும். எனவே ஏற்றுமதியை ஊக்குவித்து வருகிறோம்.

மதுரையில் பூங்கா

2000-ம் ஆண்டு கருணாநிதி, சென்னையில் திறந்து வைத்த டைடல் பூங்கா, மாநிலத்தினுடைய தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சியை தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நகருக்கு எடுத்துச் செல்ல, டைட்டல் நிறுவனம், கோவையில் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்கியதுடன் திருப்பூர், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் புதிய டைடல் பூங்காக்களை அரசு உருவாக்கி வருகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் பின்டெக் போன்ற அறிவுசார்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும் வகையில் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து ஒரு முன்னோடி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்கா டைடல் லிமிடெட் நிறுவனத்தால், இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். மதுரை நகரின் மையப்பகுதியான மாட்டுத்தாவணியில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா கட்டப்படும். முதற்கட்டமாக, ரூ.600 கோடி திட்ட மதிப்பீட்டில், 5 ஏக்கரில் இது அமைக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், மேலும் 5 ஏக்கரில் இரட்டிப்பாக்கப்படும். இந்தப் பூங்காவானது, தகவல் தொழில்நுட்பம் பின்டெக் மற்றும் தகவல் புதிய தொழில்நுட்பங்களுக்கு தரமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதுடன் மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், அது வழிவகுக்கும். முதல் கட்டத்தில், 10 ஆயிரம் பேர் இதனால் வேலைவாய்ப்பு பெறுவர்.

பொதுவாக தொழில் வளர்ச்சி என்பதை அந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியாக மட்டும் நாங்கள் பார்ப்பது இல்லை. அதன் மூலமாக வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. எனவே பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வளர்ச்சியாகவே நாம் பார்க்கிறோம். அந்த வட்டாரம், மாவட்டம் வளர்ச்சியைப் பெறுகிறது. இதன் மூலமாக மாநிலத்தின் வளர்ச்சிக் குறியீடானது வளர்கிறது. இந்த வகையில், குறுசிறு, நடுத்தர நிறுவனங்கள் அனைத்தையும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவசியமானவை. உங்களது தேவைகளைச் சொல்லுங்கள். நிறைவேற்றித் தருகிறோம். தமிழ்நாட்டுக்கு நிலையான வளத்தை நீங்கள் உருவாக்கித் தாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்