கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தமிழக தலைமை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரி அறிக்கை தாக்கல் செய்வதா? என்று அதிருப்தி தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி, இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என பரபரப்பு உத்தரவை பிறப்பித்தார்.;

Update: 2023-07-22 20:40 GMT

அவமதிப்பு வழக்கு

தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் அய்யனார் முருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றினேன். என் மீதான புகாரின்பேரில் என்னை பணியிடை நீக்கம் செய்தனர். இதை எதிர்த்து 2016-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, என் மீதான நடவடிக்கையை ரத்து செய்தது. நான் பணியாற்றாத நாட்களுக்கு 25 சதவீத சம்பளத்தை வழங்கும்படியும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஏற்கப்படவில்லை. அதன்பின்பும் அந்த உத்தரவை அதிகாரிகள் முழுமையாக செயல்படுத்தவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

சிறந்த உதாரணம்

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்து 2020-ம் ஆண்டில் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனாலும் அந்த உத்தரவை முழுமையாக செயல்படுத்தாததால் 2021-ம் ஆண்டில் மனுதாரர் இந்த அவமதிப்பு வழக்கை தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கின் எதிர்மனுதாரராக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி சேர்க்கப்பட்டும், அவர் சார்பில் தற்போது வரை பதில் அளிக்கப்படவில்லை என்பது விசித்திரமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

மற்றொரு அதிகாரி அறிக்கை

இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி மனுதாரர் சம்பந்தப்பட்ட உத்தரவை நிறைவேற்றியதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை யார் தாக்கல் செய்தது என ஆராய்ந்து பார்த்தபோது, நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் பெயரில் இருந்தது. ஆனால் அவர் இந்த வழக்கின் எதிர்மனுதாரர் கிடையாதே என விசாரித்தபோது, இந்த வழக்கின் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட சிவ்தாஸ் மீனா, தற்போது அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதனால் அவர் சார்பில் தற்போதைய நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் இந்த அறிக்கையை தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

தலைமை செயலாளருக்கு உத்தரவு

அவமதிப்பு வழக்கை பொறுத்தவரை, யார் எதிர்மனுதாரராக உள்ளார்களோ, அவர்கள்தான் அதற்கு பொறுப்பு. அவர் சார்பில் வேறு அதிகாரிகள் பதில் அளிக்க முடியாது. அதற்கு அதிகாரமும் இல்லை. இந்த அடிப்படை நடைமுறைகளை மாநில அரசின் மூத்த அதிகாரிகள் தெரிந்து இருப்பது அவசியம்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின்பு பிறப்பித்த ஐகோர்ட்டு உத்தரவை சில நாட்களுக்கு முன்புதான் நிறைவேற்றி உள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகத்துறையின் முதன்மை செயலாளராக இருந்த சிவ்தாஸ்மீனா, கோர்ட்டு உத்தரவை அவமதித்து உள்ளார். இதனால் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையின்போது (அடுத்த மாதம் 21-ந்தேதி) அவர் நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த வழக்கு ஆகஸ்டு மாதம் 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்