மாமன்னன் படத்துக்கு தடை கேட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு

மாமன்னன் படத்துக்கு தடை கேட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது

Update: 2023-06-28 21:17 GMT


நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய சினிமா படங்கள் வெளியாகியுள்ளன. இதில் கர்ணன் படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்திலும் இரு சமுதாயத்தினருக்கு இடையேயான பிரச்சினைகளை கதைக்களமாக உருவாக்கி, இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வெளியானால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்கும் வகையில் மாமன்னன் படத்துக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு மனுதாரர் வக்கீல் முறையிட்டார்.

அப்போது, மாமன்னன் படம் ரிலீஸ் ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்று மனுதாரர் வக்கீல் தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாமன்னன் படத்துக்கு தணிக்கைக்குழு அனுமதி வழங்கியதில் கோர்ட்டு தலையிட முடியாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அது சம்பந்தமாக போலீசார் உரிய நடவடிக்கை எடுத்துக் கொள்வார்கள், என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்