கியாஸ் சிலிண்டர் குடோனுக்கு தடை கோரி வழக்கு -அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கியாஸ் சிலிண்டர் குடோனுக்கு தடை கோரி வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-01-09 19:52 GMT


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த வனிதா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள பண்ணைக்காடு கிராமத்தில் எப்போதும் அதிக வெயில், அதிக குளிர் இல்லாமல் தட்பவெப்ப நிலை சீராக காணப்படும். இதன் காரணமாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் எங்கள் கிராமத்தில் நிலம் வாங்கி, பண்ணை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அங்கு வீடுகளும் கட்டி வருகின்றனர். இதனால் கட்டிடம் கட்டுவதற்கான விதிகளை பண்ணைக்காடு பேரூராட்சி, கவனமுடன் பின்பற்றி செயல்படுகிறது. இந்தநிலையில் எங்கள் கிராமத்தில் உள்ள சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டு, அதை கியாஸ் சிலிண்டர்கள் சேமிக்கும் குடோனாக பயன்படுத்துகின்றனர். ஆனால் இதற்கான எந்த அனுமதியும் முறையாக பெறவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சட்டவிரோதமான கியாஸ் சிலிண்டர் சேமிப்பு கிடங்கு செயல்பட தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் குறிப்பிடும் கட்டிடத்திற்கான எந்த ஒரு அனுமதியையும் அரசு தரப்பில் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் கூடுதல் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்