திண்டுக்கல் சிறையில் கைதி மர்மமாக இறந்த வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்- போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

திண்டுக்கல் சிறையில் கைதி மர்மமாக இறந்த வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-04-19 20:10 GMT


மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது கணவர் இசக்கியை கடந்த 2014-ம் ஆண்டில் சந்தேகத்தின் பேரில் அண்ணாநகர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் பொய்யாக கொலை வழக்கில் அவரை கைது செய்து, திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் அவர் இறந்துவிட்டார் என்று தகவல் தெரிவித்தனர். போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் என் கணவர் இறந்துள்ளார். எனவே எனது கணவர் இறப்புக்கு காரணமான போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கணவர் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் கணவர் இறந்தது தொடர்பான வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்தார்.

பின்னர் அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, மனுதாரரின் கணவர் மர்ம மரணம் குறித்த வழக்கு திண்டுக்கல் போலீசில் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுவிட்டது. மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது. அவருடைய கணவர் இறப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது குற்றவியல் மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் குற்றப்பத்திரிகை உரிய கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் கணவர் இறந்த வழக்கில் திண்டுக்கல் போலீசாரின் விசாரணை, சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, இந்த வழக்கை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்