போலீஸ் உதவி கமிஷனர் மீது சொத்து குவிப்பு வழக்கு-அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

போலீஸ் உதவி கமிஷனர் மீது சொத்து குவிப்பு வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-08-08 20:15 GMT


மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்த மதுரைவீரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ஜஸ்டின் பிரபாகர் பணியாற்றினார். அப்போது அவர் என் மீது பொய் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில் இருந்து மதுரை மாவட்ட கோர்ட்டு என்னை விடுவித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் பிரபாகரின் தூண்டுதலின் பேரில் அதே ஆண்டில் திடீர் நகர் போலீசார் என் மீது மற்றொரு பொய் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்தும் கோர்ட்டு என்னை விடுதலை செய்தது. இருப்பினும் தொடர்ந்து போலீஸ் அதிகாரி ஜஸ்டின் பிரபாகர் என்மீது பழிவாங்கும் உணர்வுடன் இருக்கிறார். இந்நிலையில் 2021-ம் ஆண்டு மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனராக ஜஸ்டின் பிரபாகர் நியமிக்கப்பட்டார். அவர் பல்வேறு ஊழல்கள் செய்து ஏராளமான சொத்துக்களை தன் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் வாங்கி குவித்து உள்ளார். இது அரசு ஊழியர்கள் சட்டத்திற்கு எதிரானது. எனவே லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புச்சட்டத்தின்படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்