ரப்பர் மரங்கள் வெட்டும் ஏலத்தில் உயர் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக வழக்கு - வனத்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ரப்பர் மரங்கள் வெட்டும் ஏலத்தில் உயர் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக வழக்கில் வனத்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-01-02 21:16 GMT


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த அந்தோணி முத்து, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தின் வட மேற்கு பகுதியில் ரப்பர் மரங்கள் அதிகம் உள்ளன. இந்த ரப்பர் தோட்டங்களில் வேலை செய்து, இப்பகுதி மக்கள் பிழைத்து வருகின்றனர். வடசேரியில் அரசு ரப்பர் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த கழகத்தில் ஒரு நிர்வாக இயக்குனர், பொது மேலாளர் ஆகிய பதவிகளில் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு செயல்படுகின்றனர். ரப்பர் தோட்ட தொழிலாளர்களால்தான் ரப்பர் கழகம் செயல்படுகிறது.

ஆனால் இந்த கழகம், தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்துவதே இல்லை. அதிகாரிகள் ரப்பர் மரங்களை வெட்டி காண்டிராக்டர்களுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒகி புயலில் பாதித்த ரப்பர் மரங்களை காண்டிராக்டர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் முறைகேடாக வெட்டினர்.

அதே போல சமீபத்தில் ரப்பர் மரங்கள் ஏலம் விடுவது சம்பந்தமாக அறிவிப்பு வெளியானது. இந்த ஏலத்தில் பங்கேற்ற காண்டிராக்டர்களுடன் அதிகாரிகள் பேரம் பேசுவது வீடியோவில் பதிவாகி உள்ளது. இது சட்ட விரோதம். இதுபோன்ற அதிகாரிகளின் நடவடிக்கைகளால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

எனவே ரப்பர் மரங்களை வெட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இதற்கான ஏலம் விடுவதில் காண்டிராக்டர்களிடம் லஞ்சம் தர கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து இந்த வழக்கு குறித்து தமிழக வனத்துறை செயலாளர், அரசு ரப்பர் கழகத்தலைவர் உள்ளிட்டோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்