கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தற்போது அவசர அவசரமாக நிறைவேற்றியதை ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
மதுரை,
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அரசு பணியாளராகிய தனக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை முறையாக வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்ததாகவும், இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் தனக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை வழங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு வழங்க வேண்டிய பணப் பலன்கள் தொடர்பாக தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 04.07.2023 அன்று முன்மொழிவு அளித்ததாகவும், அதனை பரிசீலனை செய்து 10.07.2023 அன்று மனுதாரருக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை வழங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தற்போது அவசர அவசரமாக நிறைவேற்றியதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டார். இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்த நீதிபதி, தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.