மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சரிவர ரத்தம் கிடைக்காமல் தவிக்கும் நோயாளிகள்...!!!

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சரிவர ரத்தம் கிடைப்பதில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

Update: 2023-06-03 09:42 GMT

மதுரை,

தென்மாவட்டங்களில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாகவும் ஏராளமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு சிகிச்சை, ரத்த வங்கி, மகப்பேறு சிகிச்சை, 7 உயிர்காக்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை என பல வகைகளில் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இதனால் மதுரையை சுற்றி உள்ள மாவட்ட மக்கள் அவசர சிகிச்சைக்காக அதிக அளவில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு சரிவர ரத்தம் கிடைக்கவில்லை என நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவைப்படும் ரத்தத்தை வெளியில் தயார் செய்து கொடுக்க வேண்டும் அல்லது உறவினர்களை வைத்து ரத்த தானம் கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்துவதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், வெளி மாவட்டங்களில் இருந்து நல்ல சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறோம். ஆனால், ரத்தம் தேவைப்படும்போது அதனை ஆஸ்பத்திரியில் இருந்து ஏற்பாடு செய்து தர மறுக்கின்றனர். யாராவது தன்னார்வலர்களை அழைத்து வந்து ரத்தம் கொடுக்க வேண்டும் என கூறுகின்றனர். வெளியூரில் இருந்து வந்திருக்கும் நோயாளிகள், தன்னார்வலர்கள் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான ரத்தத்தை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தயார் செய்து கொடுத்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்றனர்.

இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறுகையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் ஒரே சமயத்தில் 3 ஆயிரம் யூனிட் ரத்தத்தை சேமித்து வைக்கமுடியும். தமிழகத்தின் 2-வது பெரிய ரத்த வங்கியாக மதுரை அரசு ஆஸ்பத்திரி திகழ்கிறது. இங்கு, ஆண்டுக்கு 25 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்படுகிறது. அவைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு ரத்த சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள், பிளாஸ்மா என பிரிக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, சுமார் 60 ஆயிரம் நோயாளிகள் பயன் பெறுகின்றனர். கொரோனா காலகட்டத்தில், அதிக அளவு ரத்தத்தை சேமித்தவர்கள் பட்டியலில் மதுரைக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. ரத்த தானத்தில் மதுரை மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது.

ஆனால், தற்போது நாளுக்கு நாள் ரத்தத்தின் தேவை அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனால், தானம் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. இதன் காரணமாகத்தான் நோயாளிகளின் உறவினர்களிடம் ரத்தம் தானமாக வாங்கப்படுகிறது. ஆனால் அவர்களை கட்டாயப்படுத்துவது கிடையாது. அவர்களுக்கு தேவையான ரத்தம் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து கொடுக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் சார்பில் பல இடங்கள், கல்லூரிகளுக்கு சென்று முகாம் நடத்தினோம். தற்போது கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் சரிவர முகாம்கள் நடத்த முடிவதில்லை. தன்னார்வலர்கள் அதிக அளவில் ரத்த தானம் கொடுக்க முன்வர வேண்டும். அப்போதுதான் அதிக அளவில் ரத்தத்தை சேமிக்க முடியும். பொதுமக்களும் அதிக அளவில் ரத்த தானம் கொடுக்க வேண்டும். அதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் உள்ளன. ரத்ததானம் கொடுப்பதால் எந்தவித தீங்கும் கிடையாது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்