கஞ்சா வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை மதுரை கோர்ட்டு தீர்ப்பு
கஞ்சா கடத்தல் வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கஞ்சா கடத்தல் வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கஞ்சா கடத்தல்
மதுரை மாவட்டம் திருவாதவூர் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது திருவாதவூர்-மேலூர் சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் 23 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அதை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவாதவூரை சேர்ந்த கார்த்திக் (வயது 26), தர்மா (26) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் விஜயபாண்டியன் ஆஜரானார். விசாரணை முடிவில், கைதானவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.