மதுரை தம்பதி விழிப்புணர்வு பிரசார பயணம்
மதுரை தம்பதி விழிப்புணர்வு பிரசார பயணமாக திருச்சி வந்தனர்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் அகில இந்திய காந்திய இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவருடைய மனைவி சித்ரா. இவர் காந்திய இயக்க மகளிர் பிரிவு செயலாளராக உள்ளார். தம்பதியான இருவரும் அறிவியல் மற்றும் சுகாதாரம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார சைக்கிளுடன் திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் இருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா வரையும், ஸ்ரீஹரிகோட்டா முதல் கர்நாடக மாநிலம் பெங்களூரு வரையும் நடைபயணம் (1000 கிலோ மீட்டர்) மேற்கொண்டுள்ளனர். கடந்த 28-ந் தேதி திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் நடைபயணத்தை தொடங்கிய இந்த தம்பதியினர் நேற்று மாலை திருச்சி மாநகருக்கு வந்தனர். திருச்சியில் இருந்து விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை வழியாக ஆந்திரா சென்று, பின்னர் பெங்களூரு செல்கிறார்கள். இந்த தம்பதியினர் ஏற்கனவே காந்திய கொள்கைகளை பரப்பும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நடைபயணங்களை மேற்கொண்டுள்ளனர். தற்போது கருப்பையாவின் மனைவி சித்ரா காலில் ஏற்பட்ட வலி காரணமாக நடக்க முடியாத நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்றுசக்கர வாகனத்தில் பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ளார்.