மதுரை மத்திய சிறை அங்காடியில் இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்பனை - சந்தை விலையை விட 30 சதவீதம் குறைவு
இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் மதுரை மத்திய சிறை அங்காடியில் பொதுமக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இது சந்தை மதிப்பை விட 30 சதவீதம் குறைவான விலைக்கு கிடைக்கிறது.
இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் மதுரை மத்திய சிறை அங்காடியில் பொதுமக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இது சந்தை மதிப்பை விட 30 சதவீதம் குறைவான விலைக்கு கிடைக்கிறது.
திறந்தவெளி சிறைச்சாலை
தென் தமிழகத்தில் மிக முக்கிய சிறைச்சாலையாக மதுரை மத்திய சிறை இருந்து வருகிறது. இந்த சிறை நிர்வாகத்திற்கு கீழ் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் புரசடை உடைப்பு பகுதியில் திறந்தவெளி சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 84 ஏக்கரில் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் மூலம் நெடுங்கால பயிர்களான கொய்யா, மாதுளை, எலுமிச்சை, வாழை, தென்னை, பனை விவசாயமும், குறுங்கால பயிர்களாகிய காய்கறிகள், பழவகைகள், கீரை வகைகளும் பயிரிடப்படுகிறது.
மேலும் காளையார்கோவில் பகுதியை மழைப்பகுதியாக மாற்றும் நோக்கில் மழைதரக்கூடிய டிம்பர் மரங்கள், இலுப்பை மரங்கள், ஆல், அரசு, வேம்பு, பூவரசு போன்ற மரங்கள் 15 ஏக்கரில் நடப்பட்டுள்ளன. இவ்வாறு அங்கு சமூக காடுகளையும் அமைத்துள்ளனர்.
தர்பூசணி பழங்கள்
சிறைத்துறை டி.ஜி.பி.அம்ரேஷ்புஜாரி ஆலோசனைப்படி, மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி.பழனி, சிறை சூப்பிரண்டு வசந்தக்கண்ணன் ஆகியோர் சிறைவாசிகளின் பொருளாதார நலன்கருதியும், சிறை நிர்வாகத்தின் வருமானத்தை பெருக்கும் நோக்கோடு கடந்த 2020-ம் ஆண்டில் குறுகிய கால பயிர்களான, காய்கறிகள், பழங்கள் அங்கு வளர்க்கப்பட்டு வந்தன. இது தவிர 200-க்கும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் மூலம் கிடைக்ககூடிய கழிவுகளை பயன்படுத்தி உருவாக்கப்படும், பஞ்சகாவியம், அமிர்தகரைசல் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி இயற்கை முறையில் விவசாயமும் அங்கு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு திறந்தவெளி சிறைச்சாலையில் பயிரிடப்பட்ட தர்பூசணி பழங்கள் நன்கு வளர்ந்துள்ளன. அவ்வாறு வளர்ந்த சுமார் 2 டன் தர்பூசணி பழங்கள் தற்போது மதுரை மத்திய சிறைச்சாலை வாசல் முன்பு உள்ள அங்கன்வாடி மையத்தில் பொதுமக்களின் விற்பனைக்கு வந்துள்ளது. கோடை காலம் நெருங்கி கொண்டிருப்பதால் பொதுமக்கள் மத்தியில் தர்பூசணி பழத்தின் தேவை அதிகரித்துள்ளது.
சிறை அங்காடியில் விற்பனை
மேலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் சந்தை மதிப்பை விட 20 முதல் 30 சதவீதம் குறைவான விலைக்கு, சிறை நிர்வாகம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு தர்பூசணி பழம் 10 கிலோ முதல் 13 கிலோ வரை எடை இருக்கும் அளவிற்கு பழங்கள் பெரிதாகவும், தரமானதாகவும் இருப்பதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் விற்பனையும் வெகுவாக நடைபெறுகிறது.
இது போன்று மதுரை மத்திய சிறை அங்காடியில் இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட பஞ்சகாவியம், அமிர்தகரைசல் போன்ற திரவவடிவிலான இயற்கை உரங்களும் விற்பனை செய்யப்படவுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அடுத்தக்கட்டமாக கொய்யா, மா, எலுமிச்சை உள்ளிட்ட பழங்களும் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கிடைக்கும் தொகையில் 20 சதவீதம் விவசாய பணிகளில் ஈடுபடும் சிறைவாசிகளுக்கு ஊதியமாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.