நள்ளிரவில் மதுரை விமான நிலைய ஓடுபாதையில் சுற்றித்திரிந்த வாலிபரால் பரபரப்பு
நள்ளிரவில் மதுரை விமான நிலைய ஓடுபாதையில் சுற்றித்திரிந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
நள்ளிரவில் மதுரை விமான நிலைய ஓடுபாதையில் சுற்றித்திரிந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கும், துபாய், இலங்கை, போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக மதுரை அறிவிக்கப்பட்டு உள்ளதால், பல கோடி ரூபாய் செலவில் கட்டுமான பணிகளும், விரிவாக்க திட்ட பணிகளும் நடந்து வருகின்றன.
அதில் ஒருபகுதியாக புதிய விமான நிலைய முனைய கட்டிடம் கட்டும் வேலையும் நடைபெற்று வருகிறது. வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
மேற்குவங்கத்தைச் சேர்ந்த யுகில் மார்டி என்பவர் தன் மனைவி, மகன் கிலியன் மார்டியுடன் (19 வயது) தங்கி வேலை பார்த்து வருகிறார்.
போலீசார் விசாரணை
நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுரை விமான நிலைய ஓடுபாதை சுற்றுச்சுவரில் ஏறிக்குதித்து வாலிபர் ஒருவர், ஓடு பாதை பகுதியில் சுற்றிதிரிந்துள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் இதைக்கண்டு, அந்த வாலிபரை பிடித்து அவனியாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரித்ததில், அவர் மேற்கண்ட கிலியன் மார்டி என தெரியவந்தது.
மனநிலை சரியில்லாததால் வேலைக்கு எங்கும் அனுப்பாமல் தனது மகனை தன்னுடன் வைத்திருந்ததாகவும், இரவு நேரத்தில் எங்களுக்கு தெரியாமல் விமான நிலைய வளாகத்திற்குள் சென்று விட்டதாகவும் யுகில் மார்டி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவனியாபுரம் போலீசார், கிலியன் மார்டியை தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.
நள்ளிரவில் மதுரை விமான நிலைய ஓடுபாதையில் வாலிபர் சுற்றித்திரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.