மதுரை அ.தி.மு.க. மாநாடு.. சென்னையிலிருந்து புறப்படும் சிறப்பு ரெயில்

அ.தி.மு.க. மாநாட்டையொட்டி, சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில் ஒன்று புறப்படுகிறது.

Update: 2023-08-18 10:13 GMT

சென்னை,

அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எழுச்சிமிகு மாநாடு 20-ந்தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார்.

அதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டு இரவு-பகலாக நடந்து வருகிறது. மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் வாகனங்களை ஒழுங்கு செய்துள்ளனர். பஸ், வேன், கார்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் செல்வதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ். ராஜேஷ், தி.நகர் சத்யா, வி.என்.ரவி, அசோக் ஆகியோர் சென்னையில் இருந்து தொண்டர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தி.நகர் சத்யா மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தனியாக சிறப்பு ரெயில் ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ரெயில் குளுகுளு வசதியுடன் 3-ம் வகுப்பு படுக்கை பெட்டிகளாக விடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி பெற்று ஐ.ஆர்.டி.சி. மூலம் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. 1,200 பேர் இதில் பயணம் செய்கிறார்கள். 14 ஏ.சி. பெட்டிகளும், ஒரே ஒரு சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியுடன் நாளை (19-ந் தேதி) இரவு 10 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படுகிறது.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முழு தொகையையும் 2 மாவட்ட செயலாளர்கள் செலுத்தியுள்ளனர். இதேபோல மாநாடு முடிந்து இரவு 10 மணிக்கு மதுரையில் இருந்து ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை எழும்பூர் வந்து சேருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் அணிவகுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்